புவனேஸ்வர், ஒரிசா
ஒரிசாவின் முன்னாள் சட்டப்ப்பேரவை உறுப்பினர் நாராயண் சாகு தனது பி எச் டி கல்விக்காக அரசியலில் இருந்து விலகி உள்ளார்.
கல்வி கற்க வயது ஒரு தடை இல்லை என்பது அனைவரும் அறிந்ததே. எழுத்தறிவு இல்லாத மக்களுக்காக முதியோர் கல்வி அமைக்கப்பட்டதே இதன் அடிப்படையில் தான். அது மட்டுமின்றி இளம் வயதில் உயர்கல்வி பயில முடியாத மக்களுக்காக பல திறந்த வெளி பல்கலைக் கழகங்களும் இயங்கி வருவதை நாம் அறிவோம்.
ஒரிசாவை சேர்ந்த 80 வயதானா முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் நாராயண் சாகு. இவர் இரண்டு முறை சட்டப்பேரவை உறுப்பினராகவும் ஒரு முறை மக்களவை உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டவர் ஆவார். இவர் கடந்த 1963 ஆம் வருடம் ராவென்ஷா பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத் துறையில் பட்டம் பெற்றவர்.
நாராயண் சாகு 46 வருடங்கள் கழித்து 2009 ஆம் வருடம் உத்கல் பல்கலைக்கழகத்தில் தனது பட்டமேற்படிப்பை முடித்தார். அதன் பிறகு 2012 ஆம் வருடம் எம் பில் பட்டம் பெற்றார். அத்துடன் நில்லாமல் தற்போது அவர் பி எச் டி படிக்க மீண்டும் கல்லூரியில் சேர்ந்து சக மாணவர்களுடன் வகுப்புகளுக்கு வருகை தருகிறார்.
மாணவர்களுக்கான விடுதியில் ஒரு சாதாரண அறையில் தங்கி படிக்கும் இவருக்கு விடுதியில் பல இளைய மாணவர்கள் தோழர்களாக உள்ளனர். அவர்களுடன் நாராயண் வித்தியாசமின்றி பழகி அனைவரையும் கவர்ந்துள்ளார். அவருடைய தோழர்கள் தங்களுடன் தலைமுறை இடைவெளி இன்றி பழகுவதாக புகழ்ந்துள்ளனர்.
நாராயண் சாகு, “நான் அரசியலுக்கு விரும்பி வந்தேன். ஆனால் தற்போது வெறுப்பு அடைந்துள்ளேன். நான் ஒரு மாணவனாக எனது கல்வியை மேம்படுத்த விரும்பினேன். அதனால் நான் அரசியலை விட்டு விலகி விட்டேன். தற்போதைய அரசியலில் எந்த விதிமுறையும் கொள்கைப் பிடிப்பும் கிடையாது. அப்படிப்பட்ட அரசியலில் இருப்பதை விட மாணவனாக இருப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்” என தெரிவித்துள்ளார்.