கோண்டியா

சாலை விபத்தில் சிக்கி மூளைச்சாவு அடைந்த 6 வயது சிறுமியின் உடல் உறுப்புக்கள் வேறு குழந்தைகளுக்கு பொருத்தப்பட்டுள்ளன

மகாராஷ்டிரா மாநிலம் கோண்டியாவில் உள்ள 6 வயது சிறுமி ரேவ்யானி.   இரண்டாம் வகுப்பு படித்து வரும் இவர் தனது மாமாவுடன் இரு சக்கர வாகனத்தில் சென்றுக் கொண்டிருந்தார்  அப்போது ஏற்பட்ட விபத்தில் இருவரும் பலத்த  காயம் அடைந்தனர்.

அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இருவரில் ரேவ்யானியின் மாமா உடல் நிலை தேறி வருகிறார்.  ஆனால் ரேவ்யானி எட்டு நாட்கள் சிகிச்சைக்குப் பின் மூளைச்சாவு ஏற்பட்டது.   இதனை தெரிவித்த மருத்துவர்களிடம்  ரேவ்யானியின் பெற்றோர் அவருடைய உடல் உறுப்புக்களை தானம் செய்ய சம்மதித்தனர்.

தங்கள் மகள் மறைந்தாலும் அவளுடைய உடல் உறுப்பு தானத்தினால் வேறு சில குழந்தைகள் வாழ்வு பெறட்டும் என அந்த பெற்றொர் தீர்மானித்தனர்.   நேற்று ரேவ்யானியின் உடல் உறுப்புக்கள் எடுத்து மற்ற குழந்தைகளுக்கு பொருத்தப்பட்டுள்ளன.

சென்னையை சேர்ந்த ஒரு கிழந்தைக்கு ஒரு சிறுநீரகமும் மும்பைய சேர்ந்த குழந்தைக்கு இருதயமும் பொருத்தப்பட்டுள்ளன.   நாக்பூரில் பார்வை இழந்த இரு குழந்தைகளுக்கு சிறுமியின் கண்கள் பொருத்தப்பட்டுள்ளன. அத்துடன் அவரது கல்லீரலும் நாக்பூரில் ஒரு சிறுமிக்கு பொருத்தப்பட்டுள்ளது.