சென்னை: தமிழகத்தின் நெய்வேலியில் உள்ள என்எல்சி நிறுவனத்துக்கு தேர்வான 1,552 பொறியாளர்களில் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் 8 பேர் மட்டுமே தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். இது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மத்தியஅரசின் வஞ்சகப் போக்குக்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து வேல்முருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
“நெய்வேலி என்.எல்.சி. இந்தியா நிறுவனத்தில், மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல்(EEE), எலக்ட்ரிக்கல்(ECE), சிவில், மனித வளம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் 259 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வு, கடந்த நவம்பர் மாதம் 17, 24,25 ஆகிய தேதிகளில் நடைபெற்றது.
இத்தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கான நேர்முகத் தேர்வுக்கு, அழைப்பு விடுத்து கடந்த 30 அன்று, பெயர் பட்டியல் ஒன்றை என்.எல்.சி. இந்தியா நிர்வாகம் வெளியிட்டுள்ளது. அழைக்கப்பட்ட பட்டியலில், அபேய் குமார் சிங், அபேய் திவாரி, அபிஷேக் சுக்லா, பரத் பால், கௌரவ் தேஸ்வால் உள்ளிட்ட வட மாநிலங்களை சேர்ந்தவர்கள் பெயர்கள் அதிகளவில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், தமிழக இளைஞர்கள் 2 பேர் பெயர்கள் மட்டுமே அப்பட்டியிலில் உள்ளது. அதாவது, மண்ணின் மக்கள் 1 விழுக்காடு கூட இல்லை என்பது அதிர்ச்சியையும், வேதனையும் அளிக்கிறது. இதன் மூலம், நெய்வேலி என்.எல்.சி. இந்தியா அனல் மின் நிலையத்தில், தமிழக இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை திட்டமிட்டு மறுக்கப்பட்டுள்ளது அப்பட்டமாக தெரிகிறது.
சொந்த மண்ணின் மக்களுக்கு வேலைவாய்ப்புகள் மறுக்கப்படுவது இது புதியதல்ல. இரயில் நிலையங்கள், மின்துறை, நீதித்துறை, வங்கிகள், தனியார் மென்பொருள் நிறுவனங்கள், உணவகங்கள் உள்ளிட்ட தமிழகத்தின் அனைத்துத் துறைகளிலும், தற்போது பிற மாநிலத்தவர்களின் ஆதிக்கம் நிறைந்து இருக்கிறது. திட்டமிட்டு, மத்திய அரசு, தமிழர்களை தொடர்ச்சியாக வஞ்சித்து வருகிறது. தமிழகத்தை வெளியார்களின் வேட்டைக்காடாக மாற்றவே, இப்படியான சதி செயல்களை மத்திய பாஜக அரசு அரங்கேற்றி வருகிறது. மோடி அரசின் சதி செயல்களுக்கு, அடிமை அரசான எடப்பாடி அரசும், துணை போகிறது என்பது வேதனைக்குரியது.
வேல்முருகன்
ஏற்கனவே, தமிழகத்தில் உள்ள மத்திய, மாநில அரசு வேலை தமிழரல்லாதவர்கள் ஆக்கிரமிக்கப்பட்டு கொண்டிருக்கும் நிலையில், 90% சதவீதம் மண்ணின் மக்களுக்கே வேலைவாய்ப்புகளை வழங்க வேண்டும், தனியார் நிறுவனங்களில் மண்ணின் மக்களுக்கே வேலையில் முன்னுரிமை வழங்க வேண்டும் என்ற முழக்கங்களை முன் வைத்து, தமிழக வாழ்வுரிமைக் கட்சி கடந்த 10 ஆண்டிற்கு மேலாக போராடி வருகிறது.
ஒரே நாடு என்று பேசக்கூடிய பாஜக ஆளும் மாநிலங்களான அரியானா, கர்நாடகம், குஜராத் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில், மண்ணின் மக்களுக்கே வேலைவாய்ப்பில் முன்னுரிமை என்று கூறி வருவதோடு, அதற்காக சட்டப்படியான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.
ஆந்திரா, மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், மேற்கு வங்காளம், ஜார்க்கண்ட், ஓடிசா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில், மண்ணின் மக்களுக்கான வேலை வாய்ப்பு உறுதி செய்யப்பட்டு, அதற்கான சட்டங்கள் நடைமுறையில் உள்ளன. ஆனால், மண்ணின் மக்களாகிய தமிழக இளைஞர்கள் மட்டும் என்ன பாவம் செய்தார்கள் என்பது தெரியவில்லை.
எனவே, நெய்வேலி என்.எல்.சி. இந்தியா நிர்வாகம் வெளியிட்டுள்ள பட்டியலை திரும்ப பெற்று, அனல் மின் நிலையத்தில் உள்ள ஒப்பந்த பணியாளர்களுக்கும், தமிழக இளைஞர்களுக்கும் வேலை வாய்ப்பில் முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி கேட்டுக்கொள்கிறது. அப்படி நடவடிக்கை எடுக்காமல், என்.எல்.சி. இந்தியா நிர்வாகம் மெத்தனப்போக்கு காட்டும் பட்சத்தில், என்.எல்.சி. இந்தியா நிறுவனத்ததிற்கு நிலம் வழங்கிய சுற்றுப்புற மக்களையும், ஒப்பந்த ஊழியர்களையும், காத்திருப்போர் பட்டியலில் உள்ள பணியின் போது இறந்தவர்களின் வாரிசுகள், அப்ரண்டிஸ் (apprentice) பயிற்சி பெற்றவர்கள் தமிழக இளைஞர்களையும் ஒன்று திரட்டி, மண்ணின் மக்களுக்கு வேலை கொடு என்ற முழக்கத்துடன் தமிழக வாழ்வுரிமைக் கட்சி மாபெரும் போராட்டத்தை முன்னெடுக்கும் என எச்சரிக்கை விடுக்கிறேன்.
அதே நேரத்தில், ஆந்திரா, கர்நாடகம், குஜராத் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களை போன்று, மத்திய, மாநில அரசு வேலைவாய்ப்பிலும், தனியார் நிறுவன வேலைவாய்ப்பிலும் மண்ணின் மக்களுக்கே முன்னுரிமை அளிக்கும் வகையில், தமிழக அரசு தாமதிக்காமல் சட்டத்தை இயற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில், தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுக்கிறேன்”.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.