சென்னை:

கொரோனா தடுப்பு, நிவாரணப் பணிகள் குறித்து கூட்டணி கட்சித் தலைவர்களுடன் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்  காணொலி காட்சிமூலம்  இன்று ஆலோசனை நடத்தினார். இதில் 8 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் மத்திய மாநில அரசுகள் அறிவித்துள்ள  நிவாரணங்கள் அடித்தட்டு மக்களிடைய சென்றடைகிறதா என்பது குறித்து, கூட்டணிக்கட்சித் தலைவர்களுடன் ஆலோசனை நடத்தப்படும் என திமுக அறிவித்தது. ஆனால், ஊரடங்கை காரணம் காட்டி, காவல்துறை திமுகவுக்கு அனுமதி மறுத்துவிட்டது.

இதையடுத்து, ஸ்டாலின் வெளியிட்ட அறிவிப்பில், கொரோனா நோய்த் தடுப்பு பணிகள்நடந்து கொண்டிருக்கும் இந்தநேரத்தில் அதிமுகவைப் போலஅரசியல் செய்ய திமுக விரும்பவில்லை. தமிழக மக்களின் நலன் சார்ந்த பிரச்சினைகள் குறித்து ஏப். 16-ம் தேதி (இன்று)காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தப்படும்’’ என்று  தெரிவித்திருந்தார்.

அதன்படி,  இன்று காலை 11 மணிக்கு  காணொளி காட்சி மூலம் கூட்டணிக்கட்சித் தலைவர்களு டன்  திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அண்ணா அறிவாலயத்தில் இருந்து ஆலோசனை நடத்தினார்.

இந்த காணொளி ஆலோசனைக் கூட்டத்தில், எ, திக தலைவர் கி.வீரமணி, தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச்செயலாளர் கே.பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன், விசிக தலைவர் திருமாவளவன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசியத் தலைவர் கே.எம்.காதர் மொகிதீன், மமக தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொதுச்செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன் உள்பட பலர் பங்கேற்றனர்.

இந்த கூட்டத்தில், ஊரடங்கு நீட்டிப்பு, மாநில மற்றும் மத்திய அரசின்  நிவாரண அறிவிப்புகள் குறித்து விவாதிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து 8 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.