சென்னை:
சென்னையில் இன்று ஒரே நாளில் 6 பெண் மருத்துவர்கள் உள்பட 8 மருத்துவர்கள் மற்றும் 4 செவிலியர்கள் என 12 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இது மருத்துவர்களி டையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்கும் நோக்கில் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் எடுத்தாலும் வைரஸ் பரவல் நாளுக்கு நாள் தீவிரமாகி வருகிறது. அதிகப்பட்சமாக சென்னையில், நேற்று மட்டும் புதிதாக 380 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5,262 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தின் மொத்த பாதிப்பில் ஏறக்குறைய 60 சதவிகித பாதிப்பு சென்னையிலேயே உள்ளது.
இந்த நிலையில் சென்னையில் இன்று ஒரே நாளில் 6 பெண் மருத்துவர்கள் உள்ளிட்ட 8 மருத்துவர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. மேலும், 4 செவிலியர்க ளுக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது.
அதன்படி, சென்னை அரசு பல் மருத்துவமனையில் பணிபுரிந்து வரும் 3 பெண் மருத்துவர்கள் உட்பட 4 பேருக்கு இன்று தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை பயிற்சி பெண் மருத்துவர் மற்றும் செவிலியருக்கும், கே.கே.நகர் இ.எஸ்.ஐ மருத்துவமனை மருத்துவர் ஒருவருக்கும் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது
கோடம்பாக்கம், எழும்பூர், சூளைமேடு, அயனாவரம் பகுதிகளை சேர்ந்த தனியார் மருத்துவர்கள் 4 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
8 மருத்துவர்கள் மற்றும் 4 செவிலியர்கள் உள்பட 12 மருத்துவப் பணியாளர்களுக்கு தொற்று பரவியுள்ளதை அடுத்து, அவர்களுடன் தொடர்பிலிருந்தவர்கள், அவர்களின் குடும்பத்தினர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர்.