சென்னை: தமிழகத்தில் ஐந்து மாவட்டங்களில்,  புதிதாக எட்டு மணல் குவாரிகள் திறக்க தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது. ஏற்கனவே  300க்கும் மேற்பட்ட இடங்களில், ஆற்று மணல் குவாரிகள் மூலம் எடுக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது மேலும் 8 இடங்களில் திறக்க அரசு முடிவு செய்துள்ளது.

தமிழ்நாட்டில் வரலாறு காணாத அளவில் மணல் வளத்தை வண்டை வண்டையாக கொள்ளையடித்துக் கொழுத்த மணல் மாபியாக்களும், அரசியல் குண்டர்களும், இவர்களைக் கட்டுப்படுத்த்த தவறியதால்,  ஆறுகள் வற்றி, சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டு வருகிறது. மேலும்,  எங்கு பார்த்தாலும் மணல் கொள்ளை, தடுக்க முயன்றால் அடி வெட்டுக் குத்து கொல்லு. ஆட்சியாளர்கள், காவல்துறையினர் என அனைத்துத் தரப்பினரும் இணைந்து இதில் செயல்பட்டு வந்ததால் மக்கள் பெரும் தவிப்புக்குள்ளாகினர். ஆறுகள் அழிந்து வருகின்றன. இதுதொடர்பாக வழக்குகளில் மணல்குவாரிகளுக்கு தடை விதிக்கப்பட்டது. தற்போது,  வழக்கில் தீர்வு காணப்பட்டுள்ள நிலையில், புதிய குவாரிகளை தமிழ்நாடு அரசு தொடங்கி உள்ளது.

தமிழ்நாடு முழுவதும் உள்ள மணல் குவாரிகளில் சட்டவிரோத மண்திருட்டு நடைபெற்று வந்தது. இதனால், ஆற்றில் நீர்வரத்து உள்பட சுற்றுச்சூழலும் பாதிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையில்,  குவாரியில் இருந்து, ‘யார்டு’க்கு மணல் அள்ளி போடும் ஒப்பந்ததாரர்கள் முறைகேடு செய்வதாக புகார் எழுந்தது. அவர்கள் சட்டவிரோத பண பரிமாற்றத்தில் ஈடுபட்டது தொடர்பாக, அமலாக்கத்துறை விசாரணை மேற்கொண்டது. இதனால், குவாரிகள் மூடப்பட்டன.

இதையடுத்து, 30க்கும் மேற்பட்ட இடங்களில் மணல் குவாரிகள் திறக்க, நீர்வளத்துறை நடவடிக்கை எடுத்தது. சுற்றுச்சூழல் அனுமதி உள்ளிட்ட பணிகள் முடிந்த நிலையில், ஒப்பந்ததாரர்களை தேர்வு செய்வதில் பிரச்னை ஏற்பட்டது. இதனால், புதிய குவாரிகள் திறப்பு நடவடிக்கை பாதியில் முடங்கியது.

இந்த நிலையில், ஏற்கனவே, சுற்றுச்சூழல் அனுமதி பெறப்பட்ட எட்டு இடங்களில், புதிதாக மணல் குவாரிகளை திறக்க அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி புதுக்கோட்டை மாவட்டத்தில் 3 குவாரிகள்; கடலுாரில் 2 குவாரிகள்,  தஞ்சாவூர், நாமக்கல், ராணிப்பேட்டை மாவட்டங்களில் தலா ஒன்று என மொத்தம் எட்டு இடங்களில், மணல் குவாரிகள் திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த புதிய மண் குவாரிகள் மழைக்காலமான நவம்வர் 1ந்தேததி முதல் செயல்படத் தொடங்கும் என்றும், அன்று முதல் மணல் விற்பனை  நடைபெறும் என என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.