சென்னை,

நேற்று இரவு 9 மணி முதல் வடசென்னை உள்பட சென்னையின் பல்வேறு இடங்களில் திடீர் மின் விநியோகம் பாதிக்கப்பட்டது.

சுமார் 8 மணி நேரம் வரை நீடித்த இந்த மின்வெட்டின் காரணமாக சென்னை நகர மக்கள் கடுமையான மனஉளைச்சலுக்கு ஆளாகினர்.

தமிழகம் மின்மிகை மாநிலம் என்று கூறிவந்த நிலையில், தற்போது  கோடை காலம் தொடங்கி யுள்ள நிலையில் சென்னை மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அவ்வப்போது  மின்வெட்டு நிலவி வருகிறது. இதன் காரணமாக மக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.

இந்நிலையில், சென்னையின் உள்பகுதிகளில் சில இடங்களிலும், புறநகர் பகுதிகளில் பெரும்பாலான இடங்களிலும் நேற்று இரவு திடீரென பல மணிநேரமாக மின்வெட்டு ஏற்பட்டது.

இதன் காரணமாக மக்கள் கடும் அவதிப்பட்டனர்.  பெரும்பாலான பகுதி மக்கள் தங்கள் வீட்டு வாசல்களிலும், மொட்டை மாடியிலும்,  மரத்தின் அடியிலும் மின்சாரத்தை எதிர்பார்த்து காத்திருந்தனர்.

இந்த திடீர் மின் விநியோகம் தடைபட்டது குறித்து கூறிய அதிகாரிகள்,  வள்ளூர் தேசிய அனல் மின் நிலையத்தில் 2வது மற்றும் 3வது அலகுகளில் திடீரென்று மின் உற்பத்தி நிறுத்தப்பட்டதால் மின்விநியோகம் பாதிப்படைந்துள்ளதாக கூறினர்.

வேறுசிலர், மத்திய அரசுக்கு செலுத்த வேண்டிய பாக்கி தொகை செலுத்தாததால் மின் விநியோகம் நிறுத்தப்பட்டதாக கூறப்பட்டது.

 

2016-ஆம் ஆண்டு நவம்பர் முதல் மார்ச் வரை மின்விநியோகம் செய்யப்பட்டதற்கான தொகை ரூ.1,156 கோடியை தமிழ்நாடு மின்சார வாரியம் செலுத்தாமல் பாக்கி வைத்துள்ளதால் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டதாக கூறப்பட்டது.

ஆனால்,  தமிழக அமைச்சராக மின்சாரம் கொண்டு வரப்படும் உயர்அழுத்த மின் கம்பி மணலி அருகே பாதிப்படைந்ததால், மின் விநியோகம் பாதிக்கப்பட்டது என்று கூறினார்.

வடசென்னை அனல்மின் நிலையத்தில் மின்சாரம் கொண்டு செல்லும் பாதையில் கோளாறு ஏற்பட்டுள்ளதன் காரணமாக 1830 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுளள்ளதால் சென்னை  மற்றும் திருவள்ளூரின் பெரும்பாலான பகுதிகளில் மின்தடை ஏற்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் அத்திப்பட்டு புதுநகரில் தமிழ்நாடு மின்சார வாரியத்துக்கு சொந்தமான வடசென்னை அனல்மின் நிலையம் அமைந்திருக்கிறது. இந்த அனல்மின் நிலையத்தில் 5 அலகுகளில் 1830 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.

கடந்த சில நாட்களுக்கு முன்பே 2 அலகுகளில் 1200 மெகாவாட் மின்சார மெகாவாட்டானது கொதிகலன் பழுது, தொழில்நுட்பக் கோளாறு காரணமாக பாதிக்கப்பட்டிருந்தது.

நேற்று நிலவரப்படி வடசென்னை அனல்மின் நிலையத்தில் 630 மெகாவாட் மின்சாரம் மட்டுமே உற்பத்தி செய்யப்பட்டு வந்தது.

மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு மின் பாதைகள் மூலமாக துணை மின் நிலையங்களுக்கு அனுப்பப்படும். இந்த சூழ்நிலையில் வடசென்னை அனல்மின் நிலையத்தில் நேற்று மின் பாதையில் ஏற்பட்ட கோளாறு காரணமாக மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியாத சூழல் ஏற்பட்டது.

வடசென்னை அனல்மின் நிலையத்தில் உற்பத்தி செய்யப்படும் 630 மெகாவாட் மின்சாரமும் தண்டையார்பேட்டை, கீழ்பாக்கம், எண்ணூர் உள்ளிட்ட சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய இடங்களுக்கு விநியோகம் செய்யப்பட்டு வந்தது.

நேற்று இரவு திடீரென இந்த மின்சார உற்பத்தி நிறுத்தப்பட்டதன் காரணமாக வடசென்னை பகுதிகளில் பரவலாக 6 மணி நேரத்திற்கு மேலாக மின்தடை ஏற்பட்டது.

அதேபோன்று திருவள்ளூர் மாவட்டத்திலும் பல பகுதிகளில் அறிவிக்கப்படாத மின்வெட்டு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.