ஸ்ரீபெரும்புதூர்: தரமற்ற உணவால் பெண் தொழிலாளர்கள் பலர் உடல்நலப் பாதிப்பு அடைந்த நிலையில், 8 பெண் தொழிலாளர்களின் நிலை குறித்த தெரிவிக்க ஃபாக்ஸ்கான் நிறுவனம் மறுத்ததைத் தொடர்ந்து, அங்கு இரவு ஷிப்டில் ணியாற்றி வந்த 500க்கும் மேற்பட்ட பெண் தொழிலாளர்கள் நள்ளிரவு முதல் தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியல் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் பல கிலோ மீட்டர் தூரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டு உள்ளது.
சென்னை அடுத்த பூந்தமல்லி அருகே சுங்குவார்சத்திரம் பகுதியில் மின்னனு உதிரிபாகம் உற்பத்தி செய்யும் ஃபாக்ஸ்கான் தொழிற்சாலை அமைந்துள்ளது. இங்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த சுமார் 15000க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். 3ஷிப்டுகளாக பணி நடை பெற்று வருகிறது. பணி செய்யும் தொழிலாளர்கள் ஃபாக்ஸ்கான் நிறுவனத்தினரால், ஸ்ரீபெரும்புதூர், வடக்குப்பட்டு, வாலாஜாபாத் அடுத்த புளியம்பாக்கம், பூந்தமல்லி அடுத்த ஜமீன் கொரட்டூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள தனியார் தங்கும் விடுதிகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த பெண் தொழிலாளர்களுக்கு கடந்த புதன்கிழமை மதியம் கொடுத்த உணவு காரணமாக 175க்கும் மேற்பட்டோருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து உடலம் பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் புந்தமல்லி அதன்சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
இதுதொடர்பாக, ஃபாக்ஸ்கான் தொழிற்சாலை நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றும், சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட பெண் தொழிலாளர் களின் உடல்நிலை குறித்து விடுதி நிர்வாகம் மற்றும் பாக்ஸ்கான் தொழிற்சாலை நிர்வாகம் மற்ற தொழிலாளர்களுக்கு தகவல் தெரிவிக்க மறுத்து விட்டதாக வும் கூறப்படுகிறது.
இதுதொடர்பாக நேற்று காலையில் நிர்வாகத்திடம் தீவிர உடல்நிலை பாதிப்பால், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 8 பெண்கள் குறித்த நிலை குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு நிர்வாகம் முறையான பதிலை தெரிவிக்க மறுத்ததால், ஆத்திரம் அடைந்த சக பெண் தொழிலாளர்கள், மருத்துவமனையில் தீவிர பாதிப்பு காரணமாக அனுமதிக்கப்பட்ட 8 பெண்களும் உயிரிழந்து இருப்பார்களா என்ற அச்சத்திலும், அதிருப்திக் காரணமாகவும், ஃபாக்ஸ்கான் நிறுவனத்தை கண்டித்து, நேற்று (வெள்ளிக்கிழமை) நள்ளிரவு போராட்டத்தில் குதித்தனர்.
பணிக்கு வந்த சுமார் 1500க்கும் மேற்பட்ட ஆண் மற்றும் பெண் தொழிலாளர்கள் சுங்குவார்சத்திரம் பகுதியில் சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நள்ளிரவு சுமார் 11 மணிக்கு தொடங்கிய இந்த போராட்டம் சனிக்கிழமை காலை 8 மணிவரை நீடித்ததால் சென்னை-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் கடுமையான போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறை அதிகாரிகள் தொடர்ந்து சமரச பேச்சுவார்த்தியில் ஈடுபட்டும் தொழிலாளர்கள் சாலை மறியலை கைவிட மறுத்ததால் சென்னை-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் பல மணி நேரத்திற்கு வாகனங்கள் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டதால் வாகன ஓட்டுநர்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகினர்.
இதுகுறித்த தகவல் அறிந்த மற்ற தொழிலாளர்கள் மேலும் சில பகுதிகளில் மறியலில் ஈடுபட்டதால், ஒரகடம் அடுத்த வடக்குப்பட்டு பகுதியிலும், வாலாஜாபாத் அடுத்த புளியம்பாக்கம் பகுதியிலும் வாலாஜாபாத் செங்கல்பட்டு சாலையிலும் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.