சிங்கப்பூர்: சுமார் 8.8 டன்கள் எடைகொண்ட, கண்டெய்னர்களில் அடைத்து வரப்பட்ட யானை தந்தங்கள் சிங்கப்பூரில் பிடிபட்டுள்ளன. அந்த கண்டெய்னர்கள் வியட்நாம் நாட்டிற்கு செல்லக்கூடியவை.
இதனுடன் சேர்த்து 11.9 டன்கள் எடைகொண்ட எறும்புத்திண்ணி செதில்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.
சமீப ஆண்டுகளில், உலகளவில் சட்டவிரோதமாக கடத்தப்பட்டு கைப்பற்றப்பட்ட தந்தங்களில் இதுதான் மிக அதிக அளவாகும். சுமார் 300 ஆஃப்ரிக்க யானைகளிலிருந்து இந்த தந்தங்கள் சேகரிக்கப்பட்டிருக்கலாம் என்று கணக்கிடப்படுகிறது. இதன் பொருளாதார மதிப்பு 17.6 மில்லியன் அமெரிக்க டாலர்கள்.
கடந்த 3 மாதங்களுக்கு முன்னர்தான், சட்டவிரோதமாக கடத்தப்பட்ட 177 கிலோ யானை தந்தங்கள் சிங்கப்பூரில் கைப்பற்றப்பட்டன. அடுத்த குறுகிய காலத்திற்குள் இவ்வளவு பெரிய அளவில் யானை தந்தங்கள் கைப்பற்றப்பட்டிருப்பது சிங்கப்பூர் அதிகாரிகளையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
சிங்கப்பூர் வரலாற்றில் கைப்பற்றப்பட்ட யானை தந்தங்களிலேயே இதுதான் அதிக அளவாகும் என்று கூறப்படுகிறது. கடந்த 2002ம் ஆண்டு ஜப்பானுக்கு கடத்தப்பட்ட 6 டன்கள் எடையுள்ள ஆஃப்ரிக்க யானை தந்தங்களை சிங்கப்பூர் அதிகாரிகள் கைப்பற்றினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.