சென்னை: தமிழகத்தில் முன் எப்போதும் இல்லாத வகையில் ஒரே நாளில் 798 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் சென்னையில் மட்டும் 538 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் ஏப்ரல் 20ம் தேதிக்கு பிறகு கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை நாள்தோறும் அதிகரித்து வருகிறது. ஏப்ரல் 3வது வாரத்தில் ஒட்டுமொத்தமாக ஆயிரத்தை கடந்திருந்த கொரோனா எண்ணிக்கை அடுத்த வரக்கூடிய நாட்களில் கடும் உச்சத்தை எட்டியது.
நேற்று வரை கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 7204 ஆக இருந்தது. ஆனால் யாரும் எதிர்பார்க்காத வகையில் இன்று தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 8002 ஆக அதிகரித்து உள்ளது. இன்று ஒரே நாளில் மட்டும் 798 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
அவர்களில் 514 பேர் ஆண்கள், 284 பேர் பெண்கள். 798 பேரில் சென்னையில் இருப்பவர்களின் எண்ணிக்கை மட்டும் 538 ஆகும். அதாவது சென்னை நகரத்தில் மட்டும் கொரோனா நோய் தொற்று உடையவர்களின் எண்ணிக்கை 4371 ஆக இருக்கிறது.
தமிழகத்தில் இப்போதைய நிலவரப்படி 5895 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். இன்று மட்டும் 11862 மாதிரிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன. அதே நேரத்தில் தமிழகத்தில் கொரோனாவுக்கு இன்று ஒரே நாளில் 6 பேர் பலியாக ஒட்டு மொத்த பலி எண்ணிக்கை 53 ஆக உயர்ந்து இருக்கிறது.