சென்னை: தமிழகத்தில் ஊரடங்கை மீறி இரு சக்கர வாகனங்களில் சுற்றிய 78,707 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கொரோனா பரவலை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. தமிழகத்திலும் இந்த ஊரடங்கு வரும் 14ம் தேதி வரை கடைபிடிக்கப்படுகிறது.

அத்யாவசிய தேவைகளை தவிர மக்கள் வீடுகளை விட்டு வெளியே வரக்கூடாது என்று தமிழக அரசு அறிவுறுத்தி உள்ளது. ஆனாலும் அதை பொருட்படுத்தாமல் பொதுமக்கள் இரு சக்கர வாகனங்களில் சுற்றி திரிகின்றனர்.

குறிப்பாக ஊரடங்கின் முக்கியத்துவத்தை புரிந்து கொள்ளாமல் இளைஞர்கள் இரு சக்கர வாகனங்களில் பறக்கின்றனர். அவர்களை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் போலீசார் இறங்கி உள்ளனர்.

ஆனாலும், அவர்கள் தொடர்ந்து வெளியில் சுற்றுவதை வாடிக்கையாக கொண்டுள்ளனர். தமிழத்தில் ஊரடங்கின் போது இதுவரை, இரு சக்கர வாகனங்களில் சுற்றிய 78,707 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். பின்னர் அவர்கள் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்னர். மொத்தம் 78,307 விதிமீறல்கள் நடந்திருக்கின்றன.

71,204 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 59,868 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. 21,26,044 ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை தமிழ்நாடு காவல்துறை வெளியிட்டுள்ளது.