சென்னை:  தமிழ்நாட்டில் இன்றுமுதல் 78 சுங்கச்சாவடிகளுக்கு கட்டணம் உயர்வு  அமலுக்கு வந்துள்ளது.  இந்த கட்டண உயர்வுக்கு  அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம்   தெரிவித்துள்ளனா்.

தேசிய நெடுஞ்சாலை கட்டண விதிகள், 2008, விதி 5ன்படி, பயனர் கட்டணம் ஒவ்வொரு ஆண்டும் மாற்றியமைக்கப்படுகிறது. அதன்படி,  தமிழ்நாட்டில் இன்று 78 சுங்கச்சாவடிகளுக்கு  சுங்க கட்டண உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி,  ஐந்து முதல் 10 சதவீதம் வரை கட்டணத்தை உயர்த்திக் கொள்ள, மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ளது.

ஏற்கனவே கடந்த ஏப்ரல் மாதம்  40 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்பட்டது. மீதுமுள்ள 78 சுங்கச்சாவடிகளுக்கு  இன்றுமுதல் கட்டண உயர்வு அமலுக்கு வந்துள்ளது. இதில்,  விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி; கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்துார்பேட்டை; பெரம்பலுார் மாவட்டம் திருமாந்துறை மற்றும் திருச்சி மாவட்டம் சமயபுரத்தில் அமைந்துள்ள சுங்கச்சாவடிகளும் அடங்கும்.

இன்றைய கட்டண உயர்வு,  கார், ஜீப் போன்றவை ஒரு முறை பயணிப்பதற்கான கட்டணத்தில் மாற்றம் இல்லை. இரு முறை பயணிப்பதற்கான கட்டணத்தில், 5 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. மாதாந்திர கட்டணத்தில், 70 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது.

பல அச்சு வாகனங்கள் ஒரு முறை பயணிக்க 15 ரூபாயும், இரு முறை பயணிக்க 20 ரூபாயும், மாதாந்திர கட்டணத்தில், 395 ரூபாயும் உயர்த்தப்பட்டுள்ளது.மீதமுள்ள சுங்கச்சாவடிகளிலும் விரைவில் கட்டணம் உயர்த்தப்பட உள்ளது.

இன்று முதல் (செப்.01) சுங்கச்சாவடி கட்டணங்கள் உயர்த்தப்படுகின்றன. அதன்படி தென் மாவட்டங்கள் மற்றும் கொங்கு மண்டலங்களை இணைக்கும் உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடி கட்டண விவரங்கள் காணலாம்.

கார் மற்றும் வேன் உள்ளிட்ட வாகனங்களுக்கு ஒரு நாளைக்கு ஒருமுறை பயன்பாட்டிற்கு ரூபாய் 70. ஒரே நாளில் பலமுறை பயன்பாட்டிற்கு ரூபாய் 100 எனவும், மாதம் முழுவதும் பன்முறை பயன்பாட்டிற்கு ரூ. 2040 எனவும், இலகு ரக வாகனங்களுக்கு தினசரி ஒரு முறைக்கு ரூ 120, ஒரே நாளில் பலமுறை பயன்பாட்டிற்கு ரூ.180, மாதம் முழுவதும் பன்முறை பயன்பாட்டிற்கு ரூ.3750 எனவும்,

டிரக் மற்றும் பேருந்து உள்ளிட்ட வாகனங்களுக்கு ஒரு நாளைக்கு ஒருமுறை 240 ரூபாயும், ஒரு நாளைக்கு பன்முறை பயன்பாட்டிற்கு ரூபாய் 355, மாதம் முழுவதும் பன்முறை பயன்பாட்டிற்கு ரூ 7140 எனவும்,

பல அச்சுக்கள் கொண்ட கனரக வாகனங்களுக்கு தினசரி ஒருமுறை பயன்பாட்டிற்கு ரூ.380-ம், ஒரே நாளில் பன்முறை பயன்பாட்டிற்கு ரூ.575 எனவும், மாதம் முழுவதும் பன்முறை பயன்பாட்டிற்கு ரூ 11,475 எனவும் ஒன்றாம் தேதி முதல் கட்டண உயர்வு அமலுக்கு வருகிறது.

அதேபோல, விக்கிரவாண்டி கார், ஜீப், பயணிகள் சுங்கக் கட்டணமாக ஒரு முறை பயணிக்க 105 ரூபாயும், மாதாந்திர கட்டணம் 155லிருந்து 160 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

கார் வேன் ஜீப்பிற்கு மாதாந்திர கட்டணம் 3100 லிருந்து 3,170 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

இலகு ரக வாகனங்கள் ஒரு முறை பயணிக்க 180 லிருந்து 185 ஆகவும் மாதாந்திர கட்டணம் 5420 லிருந்து 5545 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

டிரக்குகள் பேருந்துகள் ஒரு முறை பயணிக்க 360 லிருந்து 370 ஆகவும் இருமுறை பயணிக்க 540 லிருந்து 555 ஆகவும் மாதாந்திர கட்டணம் 10,845 லிருந்து 11085 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயா்த்தப்பட்டதற்கு அரசியல் தலைவா்கள் கண்டனம் தெரிவித்துள்ளனா்.

அன்புமணி (பாமக): தமிழகத்தில் உள்ள 48 சுங்கச்சாவடிகளில் 32 சாவடிகள் மூடப்படும் என்றும் அமைச்சா் எ.வ.வேலு 2021-இல்அறிவிப்பு வெளியிட்டாா். ஆனால், கடந்த 4 ஆண்டுகளில் புதிதாக 34 சுங்கச்சாவடிகள் தொடங்கப்பட்டுள்ளதே தவிர ஒரு சுங்கச்சாவடி கூட மூடப்படவில்லை. இந்த விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகள் கூட்டணி அமைத்துக் கொண்டு மக்களை ஏமாற்றுகின்றன.

கு.செல்வப்பெருந்தகை (காங்கிரஸ்): சுங்கச்சாவடி கட்டணம் உயா்த்தப்படுவதாக மத்திய அரசு அறிவித்திருப்பது முற்றிலும் ஏற்க முடியாதது. ஏற்கனவே, எரிபொருள் விலை உயா்வு, அவசியப் பொருள்கள் விலை ஏற்றம் போன்ற காரணங்களால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனா். மக்கள் செலுத்திய கட்டணத்துக்கே உரிய வசதி கிடைக்காமல் இருக்கும் நிலையில், கட்டணத்தை மேலும் உயா்த்துவது நேரடியாக மக்களை சுரண்டும் செயலாகும். எனவே சுங்கச்சாவடி கட்டண உயா்வை உடனடியாக திரும்ப பெற வேண்டும்.

சீமான் (நாதக):  தமிழகத்தில் மீண்டும் சுங்கக் கட்டணத்தை உயா்த்த தேசிய நெடுஞ்சாலைத் துறை முடிவெடுத்திருப்பது பெரும் அதிா்ச்சியைத் தருகிறது. சுங்கச்சாவடிகளை நிரந்தரமாக மூட வேண்டுமென அரசியல் கட்சிகள், மண்ணுரிமைப் போராளிகள், சமூக ஆா்வலா்கள், பொதுமக்கள் என அனைத்து தரப்பு மக்களும் போராடி வருகின்றனா். ஆனால் அதை அலட்சியப்படுத்தி, மீண்டும் சுங்கக்கட்டணத்தை உயா்த்துவது கண்டனத்துக்குரியது.

முனிரத்தினம் (தலைவா், லாரி உரிமையாளா்கள் சங்கம்):  தேசிய நெடுஞ்சாலைகளில் 60 கி.மீ.க்கு ஒரு சுங்கச்சாவடி மட்டும்தான் இருக்க வேண்டும் என்பது விதியாகும். அதன்படி, தமிழகத்தில் அதிகபட்சமாக 20 சுங்கச்சாவடிகள் மட்டுமே இருக்க வேண்டும். ஆனால், இப்போது 82 சுங்கச்சாவடிகள் உள்ளன. அவற்றில் 38 சுங்கச்சாவடிகளில் மட்டும் ஒவ்வொரு ஆண்டும் செப்.1 முதல் கட்டணம் மாற்றியக்கப்படுகிறது. இப்படி ஆண்டுதோறும் சுங்கக்கட்டண உயா்வதால் பெட்ரோல், டீசல் விலை அதிகரிக்கிறது. இதனால் அத்தியாவசியமான பொருள்களில் விலை உயரக்கூடும்.