சென்னை: மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 77வது பிறந்தநாளையொட்டி, அவரது உருவ சிலைக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மாலை அணிவித்து மரியாதை செய்தார்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 77வது பிறந்தநாள் இன்று அதிமுகவினரால் கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி பல பகுதிகளில், பொதுமக்களுக்கு இலவச உணவு, இனிப்பு வழங்கி அதிமுகவினர் கொண்டாடி வருகின்றனர்.

இந்த நிலையில், முதலமைச்சர் ஜெயலலிதாவின் 77வது பிறந்தநாளை ஒட்டி சென்னை ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலகத்தில் உள்ள அவரது சிலைக்கு எடப்பாடி பழனிசாமி மரியாதை செலுத்தினர். இன்று காலை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்துக்கு தனது ஆதரவாளர்கள் புடை சூழ வந்த அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, அலுவலக வளாகத்தில் உள்ள எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா ஆகியோரின் சிலைக்கு மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
இதைதொடர்ந்து, 77 கிலோ எடை கொண்ட பிரமாண்ட கேக்கை எடப்பாடி பழனிசாமி வெட்டி, நிர்வாகிகளுக்கு வழங்கினார். தொடர்ந்து அங்கு கூடியிருந்த கட்சி தொண்டர் களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது. மேலும், நலத்திட்ட உதவிகள், மருத்துவ உதவி, அன்னதானம் ஆகியவையும் தொடங்கி வைக்கப்பட்டன.
இந்த நிகழ்ச்சியில் அதிமுக முன்னாள் எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், கட்சி நிர்வாகிகள் என திரளானோர் கலந்துகொண்டனர்.
இந்த நிகழ்ச்சியின் அதிமுக மூத்த தலைவர் செங்கோட்டையன் கலந்துகொள்ளவில்லை. கடந்த ஆண்டு நடைபெற்ற ஜெயலலிதாவின் பிறந்தநாள் நிகழ்ச்சியில் பங்கேற்ற செங்கோட்டையன், இந்த முறை பங்கேற்காததும் அதிமுக வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஜெ.பிறந்தநாளை முன்னிட்டு எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டுள்ள எக்ஸ்தள பதிவில், மக்களால் மக்களுக்காக அர்ப்பணிக்கப்பட்ட தன் தவவாழ்வால் உலகெங்கும் வாழும் தமிழர்களின் உள்ளங்களில் எல்லாம் இன்றும், என்றும் குடியிருக்கும் உன்னதத் தாய், தமிழ்நாட்டு மக்கள் வாழ்வு வளம்பெறும் வகையிலான தனது மக்கள் நலத் திட்டங்களின் செயல்பாட்டால் மக்களால் “அம்மா” என்று அன்புடன் அழைக்கப்பெறும் நம் ஒப்பற்றத் தலைவி, மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்களின் 77-வது பிறந்தநாளில், நம் உயிர்நிகர் அன்பு தெய்வம் மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்களின் பெரும்புகழைப் போற்றி வணங்குகிறேன். “எனக்குப் பின்னாலும் இன்னும் எத்தனை நூற்றாண்டுகள் வந்தாலும் @AIADMKOfficial மக்களுக்காகவே இயங்கும்” என்று நம் இதயதெய்வம் அம்மா சூளுரைத்த அந்த வெற்றி முழக்கத்தை, கொள்கைப் பிரகடனத்தை செயல்படுத்திட நாம் அனைவரும் உறுதி ஏற்க வேண்டிய நாள் தான் புரட்சித் தலைவி அம்மா அவர்களின் பிறந்தநாள். அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான சிறப்பு மிக்க வெற்றிக் கூட்டணி அமையப் போகிறது. வியக்கத்தக்க வெற்றிகளை நாம் பெறப்போகிறோம். அதற்கேற்ப அயராது உழைப்போம்! அம்மாவின் உண்மைத் தொண்டர்களாகப் பணியாற்றுவோம்!
இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.