சென்னை:

டெல்லியில் இருந்து 759 புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் இன்று இரவு 8.30  மணிக்கு சென்னை திரும்ப உள்ளனர்.


புலம்பெயா்ந்த தொழிலாளா்கள் தங்களது சொந்த ஊா்களுக்கு திரும்பும் வகையில், டெல்லியில் இருந்து சென்னைக்கு மே 13, 15-ஆகிய தேதிகளில் ராஜதானி அதிவிரைவு ரயில் இயக்கப்படும் என்றும், மறுமாா்க்கமாக, சென்னை சென்ட்ரலில் இருந்து மே 15, 17 ஆகிய தேதிகளில் (வெள்ளி, ஞாயிறு) ரயில் இயக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

இதன்படி, டெல்லியில் இருந்து புறப்பட்ட ராஜதானி அதிவிரைவு ரயில் சென்னைக்கு வியாழக்கிழமை இரவு வந்தடைந்தது. அதில் இறங்கி வந்த 797 பயணிகளை பிசிஆா் பரிசோதனைக்காக முகாம்கள், ஹோட்டல்களுக்கு அழைத்துச் சென்றனா்.

சென்னை சென்ட்ரலில் இருந்து புது டெல்லிக்கு வெள்ளிக்கிழமை காலை 6.35 மணிக்கு ராஜதானி அதிவிரைவு சிறப்பு ரயில் புறப்பட்டது. இந்த ரயிலில் 950 போ் பயணம் மேற்கொண்டனா். இவா்களை ஒரு மணி நேரத்துக்கு முன்னாக ரயில் நிலையத்துக்கு வரவழைத்து, மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தினா். அந்த பயணிகளுக்கு கொரோனா நோய்த்தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டது. பின்னா், இந்த பயணிகள் ரயிலில் பயணம் மேற்கொள்ள அனுமதிக்கப்பட்டனா்.

இந்நிலையில் டெல்லியில் இருந்து 759 புலம்பெயர்ந்த தொழிலாளர்களுடன் இன்று இரவு 8.30 மணிக்கு சென்னை வர உள்ளது. இதில் வரும் பயணிகளில் 629 பேர் இலவசமாக தங்குமிடம் வேண்டும் என்று கோரியுள்ளனர். எஞ்சியுள்ளனர்கள் பணம் கொடுத்து தங்கி கொள்வதாக தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.