சென்னை: சென்னையில் ஏறக்குறைய 75% மழை நீர் வடிகால் பணிகள் நிறைவடைந்துள்ளது என சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் தெரிவித்து உள்ளார். கடந்த ஆண்டு இதுபோலத்தான் 95 சதவிகித பணிகள் முடிவடைந்ததாக கூறிய நிலையில், மழை காலத்தின்மீதுமீண்டும் சென்னை வெள்ளத்தில் மிதந்து குறிப்பிடத்தக்கது.
சென்னை மாநகராட்சியில் 2 ஆயிரத்து 624 கி.மீ., நீளத்துக்கு மழைநீர் வடிகால் பராமரிக்கப்பட்டு வருகிறது. இவை ஓட்டேரி நாலா, கொடுங்கையூர் கால்வாய், விருகம்பாக்கம் கால்வாய் மற்றும் கூவம், அடையாறு, பக்கிங்காம் கால்வாய் போன்றவற்றுடன் இணைக்கப்பட்டுள்ளன.
மழைக்காலத்தில் நகரில் விழும் மழைநீரை வெளியேற்ற பயன்படுகிறது. மழை நீர் வடிகால், கால்வாய்களும் முக்கிய பங்கு வகிக்கின்றன. இந்நிலையில், தென்மேற்கு பருவமழையை முன்னிட்டு, கடந்த மாதம் 23ம் தேதி முதல், மழைநீர் வடிகால் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சென்னையிலும் தென்மேற்கு பருவமழை அவ்வப்போது விட்டு விட்டு பெய்து வருகிறது. இதனால் சாலையில் மீண்டும் தண்ணீர் தேங்கி வருகிறது.
இதுகுறித்து, கூறிய சென்னை மாநகராட்சி அதிகாரிகள், சென்னையில் மாநகராட்சியால் கட்டப்பட்ட 2,624 மழைநீர் வடிகால்களில், கடந்த ஆண்டு 1,731 கி.மீ., துாரம் துார்வாரப்பட்டு, மழைநீர் தடையின்றி தொடர்ந்து செல்வதை உறுதி செய்தது. கடந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை காலத்தில் மழைநீர் கால்வாய்களில் தண்ணீர் தேங்கும் இடங்கள் குறித்து விரிவான ஆய்வு நடத்தி நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
அதன்படி, சென்னையில், 724 கி.மீ நீளமுள்ள மழை நீர் வடிகால்கள் நல்ல நிலையில் உள்ளதாகவும், 1,900 கி.மீ நீளமுள்ள வடிகால்கள் சீரமைக்க வேண்டியதாகவும் தெரிய வந்துள்ளது. அதன்படி, வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன்னதாக அனைத்து பகுதிகளிலும் தூர் வாரும் பணியை மேற்கொள்ள திட்டமிட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதற்காக ஒவ்வொரு மண்டலத்திற்கும் தலா ரூ.50 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. முதற்கட்டமாக அனைத்து மண்டலங்களிலும் 845 கிலோ மீட்டர் நீளத்துக்கு பணிகள் நடந்து வருகின்றன. இதில் ஜூன் 12ம் தேதி வரை 125 கி.மீ தூரத்துக்கான பணிகள் முடிவடைந்து உள்ளது. இந்த மழைநீர் வடிகால்களை ஒட்டி 90 ஆயிரத்து 168 வண்டல் வடிகட்டி தொட்டிகள் அமைக்கப்பட்டுள்ளன. அதில் வாரந்தோறும் 87 ஆயிரத்து 729 தொட்டிகள் தோண்ட திட்டமிடப்பட்டு இதுவரை 40 ஆயிரத்து 264 தொட்டிகள் தோண்டப்பட்டுள்ளன. அதேபோல், 53.42 கி.மீ., நீளமுள்ள 33 கால்வாய்கள் மாநகராட்சி மூலம் பராமரிக்கப்பட்டு வருகிறது. இவை அனைத்திலும் அகயாத்மரை செடிகளை அகற்றும் பணியும் தொடங்கப்பட்டுள்ளது.
இதில், 2 பெரிய ஆம்பிபியஸ், சிறிய ஆம்பிபியஸ் இயந்திரங்கள், 4 ரோபோடிக் அகழ்வாராய்ச்சி இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. அக்டோபர் மாதத்திற்குள் பணிகளை முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த நிலையில் மழைநீடி வடிகால் பணிகளை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன், வடசென்னையில் 71%, தென்சென்னையில் 81%-ம் மழை நீர் வடிகால் பணிகள் நிறைவடைந்துள்ளது என்றுதெரிவித்துள்ளார். மேலும், மழைநீர் வடிகால் பணிகள் குறித்து விளக்கம் அளித்துள்ள ராதாகிருஷ்ணன், “மழைநீர் வடிகால்களில் சேரும் சேற்றை அகற்றுவது பெரும் சவாலாக உள்ளது. சென்னையில் மழைநீர் வடிகால் பணிகள் எந்தெந்த இடங்களில் நிறைவடைந்தது என்பதை வலைதளங்களில் பதிய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது” என கூறியுள்ளார்.