சென்னை: தமிழ்நாட்டில் வேலைக்காக காத்திருப்போர் 75லட்சம் பேர் என்றும், 58வயதுக்கு மேற்பட்டவர்கள் 11,386பேரும் வேலைவாய்ப்புக்கு காத்திருப்பதாக  தமிழக அரசு தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் கடந்த 10 ஆண்டுகளில் வேலைவாய்ப்புக்கான உத்திகளை அப்போதைய அதிமுக அரசு உருவாக்காததால், வேலைக்காக காத்திருப்போர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தற்போதைய திமுக அரசும், பல லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பை வழங்கப்போவதாக அறிவித்துள்ளது. ஆனால், கோவிட் பொதுமுடக்கம் காரணமாக, நாடு முழுவதும் மேலும் பல லட்சம் பேருக்கு பறிபோன வேலைகள் மீண்டும் கிடைக்காத நிலையே தொடர்கிறது. 2020 ஏப்ரல் கோவிட் முழு முடக்கத்தின் போது தமிழகத்தின் வேலைவாய்ப்பின்மை விகிதம் 49.8%  என்று கூறப்பட்டது.

 தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு  துறைகளில் ல் 7.5 லட்சத்துக்கும் மேற்பட்ட காலியிடங்கள் நிரப்ப படாமல் இருக்கின்றன. தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் (TNGEA ) தலைவர் அன்பரசு ஏற்கனவே தெரிவித்திருந்தார். அரசு ஊழியர்களுக்கு வழங்கப்பட்டு வரும் அதிகப்படியான சம்பளம், நிதி சிக்கல் காரணமாக, மாநில அரசு புதியதாக பணியிடங்களை நிரப்பாமலேயே இருந்து வருகிறது. பல வேலைகள்  அவுட்சோர்சிங் முறையில்  கொடுக்கப்படுவதால்,  அரசு வேலை தேடுபவர்களின் ஆசை காணல் நீராகவே மாறி வருகிறது.இந்த நிலையில், திமுக அரசு அரசு ஊழியர்களின் ஓய்வூதிய வயதை 58 லிருந்து 60 ஆக அதிகரிப்பது வேலை தேடுபவர்களுக்கு ஒரு பெரும் சிக்கலை உருவாக்கியிருக்கிறது. இதனால் வயதான லட்சக்கணக்கானோர் மேலும் 2 ஆண்டுகள் பணியில் இருக்க வேண்டிய சூழல்ஏற்பட்டுள்ள நிலையில், புதியதாக வேலை தேடுபவரின் எதிர்காலம் பாழடிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, தமிழ்நாட்டில் வேலைதேடுவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், 70 லட்சத்திற்கும் மேற்பட்டோர், வேலைவாய்ப்பு பதிவு அலுவலகத்தில் பதிவு செய்து, வேலைவாய்ப்பிற்காக பதிவு செய்து காத்திருப்பதாக தெரிவித்துள்ளது. இவர்களில் ஆண்கள், 36லட்சத்து 56ஆயிரத்து 87  பேர் என்றும், பெண்கள் 40லட்சத்து 32ஆயிரத்து 46 பேர் என்றும் கூறப்பட்டுள்ளது. இவர்களில்  58வயதுக்கு மேற்பட்டவர்கள் 11, 386 பேரும் வேலைவாய்ப்புக்கு பதிவு செய்து காத்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.