சென்னை: சமூக வலைதளங்களில் அவதூறு பதிவிட்டதாக கடந்த இரு மாதங்களில் மட்டும் 75 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளதாகவும், அதில், 16 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர் என தமிழ்நாடு டிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சி பதவி ஏற்றது முதல், சமூக வலைதளங்களில் ஆபாசபதிவு,அவதூறு பதிவிடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அவதூறு கருத்துக்கள் பரப்புவது, பெண்கள் குறித்து இழிவாக பேசுவது, சாதி மோதலை ஏற்படுத்துவது, அரசியல் கட்சியினரை அவதூறாக சித்தரித்து கருத்துக்கள் பதிவிடுவது போன்ற குற்றச்செயல்களில் ஈடுபட்டு வருபவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யும் தமிழ்நாடு காவல் துறையினர், அவர்களை கைது செய்யும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி பல பிரபலமான டியூபர்கள் கைது செய்யப்பட்டு, குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.
இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு டிஜிபி சைலேந்திர பாபு, சமூக வலைதளங்களில் அவதூறு பரப்புவோர் மீதான புகாரில் முகாந்திரம் இருந்தால் மட்டுமே நடவடிக்கை எடுக்கப்படுவதாக தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், நவீன அரசியல் வளர்ச்சியில் முக்கிய அங்கமாக விளங்கும் சமூக வலைதளங்கள் மற்றும் ஜனநாயகத்தின் நான்காவது தூணாக கருதப்படும் ஊடகங்கள், பத்திரிகைகள் வாயிலாக பலரும் சமுதாயம், அரசியல் உள்ளிட்டவை சார்ந்த ஆக்கபூர்வமான தகவல்களை பகிர்ந்து வருகின்றனர்.
ஆனால் சிலர் சுய விளம்பரத்திற்காக ஊடகம் மற்றும் சமூக வலைதளங்களில் அருவருப்பான மற்றும் அவதூறு செய்திகளை பதிவு செய்து சட்டம் ஒழுங்கு பிரச்சினையை தூண்டி விடுகின்றனர் . அதிலும் குறிப்பாக சிலர் கருத்து சுதந்திரம் என்ற பெயரில் சொந்த ஆதாயத்திற்காகவும் மக்கள் மத்தியில் பிரபலமடைய வேண்டும் என்ற எண்ணத்திலும் , மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு எதிராகவும் , அரசியல் கட்சித் தலைவர்களுக்கு எதிராகவும் , தொடர்ந்து மலிவான தரம் தாழ்ந்த கருத்துகளை பரப்பி வருகின்றனர் .
இத்தகைய அநாகரிகமான பதிவுகள் பொது அமைதியை சீர்குலைக்கும் குற்றச்செயல்கள் அதிகரிப்பதற்கு வித்திடுகின்றன . இவ்வாண்டு மே மாதம் முதல் தற்போது வரை மாநிலம் முழுவதும் சமூக வலைதளங்களில் அவதூறு கருத்துக்களை பதிவிட நபர்கள் மீது 75 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன . எல்லை மீறிய அளவில் அவதூறு பதிவுகளை மேற்கொண்ட 16 பேர் மட்டுமே கைது செய்யப்பட்டுள்ளனர்.
எனவே ஊடகம் மற்றும் சமூக வலைதளங்களில் பகிரப்படும் கருத்துக்கள் பொது அமைதிக்கும் சட்டம் ஒழுங்கிற்கும் குந்தகம் ஏற்படும் சூழ்நிலை அவதூறு செய்தி பரப்புவோர் மீது அளிக்கப்படும் புகாரில் முகாந்திரம் இருக்கும் பட்சத்தில் மட்டுமே காவல்துறையினர் பாரபட்சமின்றி நடவடிக்கை எடுத்து வருகின்றனர் .
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
ஏற்கனவே பெண்களை இழிவுப்படுத்துவதாக வந்த புகாரின் அடிப்படையில் பப்ஜி மதன், சமூக வலைதளங்களில் அரசியல் கட்சியினர் குறித்து இழிவாக பதிவிடுவதாக வந்த புகாரில் கிஷோர் கே.ஸ்வாமி, உள்ளிட்ட பலரை காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். மேலும், டிக் டாக் பிரபலங்கள் எனக் கூறிக்கொள்ளும் ஜி.பி முத்து, ரவுடி பேபி, இலக்கியா ஆகியோரின் யூடியூப் சேனலை முடக்கக்கோரியும் பல தரப்பினரிடமிருந்தும் புகார்கள் வந்த வண்ணம் உள்ளதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.