சென்னை; நாடு முழுவதும் இன்று 74வது குடியரசு தின விழா கோலாகலமாக கொண்டாடப்படும் நிலையில், மாவட்ட தலைநகரங்களில் மாவட்ட ஆட்சியர்கள் தேசிய கொடியை ஏற்றினர்.
ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 26 ஆம் தேதி குடியரசு தினம் கொண்டாடப்படுகிறது. 1947 ஆம் ஆண்டு இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு, இந்திய நாட்டிற்கென தனி அரசியலமைப்பு சட்டம் உருவாக்கப்பட்டு அது நடைமுறைக்கு வந்த நாள் 1950 ஆம் ஆண்டு ஜனவரி 26 தேதி தான். அந்த நாளே குடியரசு தினமாக கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு மத்திய, மாநில அரசு சார்பில் பல்வேறு பிரிவுகளின் கீழ் விருதுகள் வழங்கப்படுவதோடு, கலை நிகழ்ச்சிகளும் நடைபெறும்.
தலைநகர் டெல்லியில் முதன்முறையாக குடியரசு தலைவர் திரவுபதி முர்மு தேசிய கொடி ஏற்றினார். தமிழ்நாட்டில் சென்னை கடற்கரையில் நடைபெற்ற பிரமாண்ட விழாவில், முதலமைச்சர் ஸ்டாலின் முன்னிலையில், ஆளுநர் ஆர்.என்.ரவி தேசிய கொடி ஏற்றினார். அதைத்தொடர்ந்து முப்படை மற்றும் காவல்துறை அணிவகுப்பும், தொடர்ந்து, பள்ளி, கல்லூரி மாணாக்கர்களின் கண்கவர் அணிவகுப்பு நடைபெற்றது.
இந்த நிலையில், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும், மாவட்ட ஆட்சியர்கள் தேசிய கொடியை ஏற்றி, அணிவகுப்பு மரியாதையை ஏற்றனர்.