டெல்லி: நமது நாட்டு மக்களிடையே மாஸ்க் அணிவதில் மெத்தனம் காட்டி வருகின்றனர். சுமார்  74% அளவுக்கு குறைந்து விட்டது, இதனால் கொரோனா பாதிப்புக்கு ஆளாகக்கூடும் என மத்தி யசுகாதாரத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்தியாவில் கொரோனா 2வது அலை கட்டுக்குள் இருந்தாலும் 3வது அலை பரவியுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால், ஆகஸ்டு மாதமே 3வது அலையின் தாக்கம் தெரிய வரும் என மருத்துவ நிபுணர்கள் கூறி வருகின்றனர். இருந்தாலும் மத்திய, மாநில அரசுகள் 3வது அலையை எதிர்கொள்ள முன்னேற்பாடுகளை செய்து வருகின்றனர். இதற்கிடையில் தடுப்பூசி போடும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது.

இந்தியாவில்  தொற்றிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 3,01,83,876 ஆக உயர்ந்துள்ள நிலையில், இறப்பு விகிதம் 1.33 சதவீதமாக உயர்ந்துள்ளது. கொரோனாவுக்கு எதிராக நாடு தழுவிய தடுப்பூசி இயக்கத்தின் கீழ் இதுவரை செலுத்தப்பட்ட தடுப்பூசிகளின் எண்ணிக்கை 39.53 கோடியை எட்டியுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

தொற்று குறைந்துள்ளதால் பல மாநிலங்களில் தாராளமாக தளர்வுகளை அறிவித்து உள்ளதால், மீண்டும் மக்கள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. பொதுமக்கள் முகக்கவசம், தனிமனித இடைவெளி, மொத்தமாக கூடுவது தவிர்க்கப்பட வேண்டும் என தொடர்ந்து மத்திய, மாநில அரசுகள் அறிவுறுத்தி வருகிறது. ஆனால், பலர் அதை ஏற்க மறுத்து மெத்தனமாக ஊர் சுற்றி வருகின்றனர். இதனால் சில பகுதிகளில் தொற்று பரவல் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கி உள்ளது.

இதன் காரணமாக இந்தியாவில் மாஸ்க் பயன்படுத்துவது 74 சதவீதம் குறைந்து விட்டதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அதிர்ச்சி தகவல் தெரிவித்துள்ளது. தலைநகர் டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய இணை சுகாதார செயலாளர் லாவ் அகர்வால், “இந்தியாவில் முகல்கவசங்களின் பயன்பாடு வீழ்ச்சியடைவதை ஆய்வுகள் தெரிவிக்கின்றன. முகக்கவசங்களின் பயன்பாட்டை நம் வாழ்வில் ஒரு அங்கமாக இணைத்துக்கொள்ள வேண்டும். மே மற்றும் ஜூலை மாதங்களுக்கு இடையில் இந்தியாவில் பொதுமக்கள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. இதுபோன்ற செயல்பாடுகள் தொற்று பரவலை அதிகரிக்கலாம்” என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஏற்கனவே கடந்த மே மாதம் வெளியான ஆய்வறிக்கையில், 50 சதவீத மக்கள் இன்னும் முகமூடி (மாஸ்க்) அணியவில்லை, அதே நேரத்தில் 64 சதவீதம் பேர் முகமூடி அணியவில்லை, மூக்கை மறைக்கவில்லை என்று ஒரு தெரிவித்திருந்து. தற்போதைய ஆய்வில் 74 சதவிகிதம் பேர் முகமூடி அணிவது இல்லை என்ற அதிர்ச்சி தகவலை தெரிவித்து உள்ளது.