டில்லி

மது நாட்டின் 73 சதவீத சொத்துக்கள் / வளங்கள், 1 சதவீத மக்களிடம் மட்டுமே உள்ளதாகவும் மக்களிடையே வருவாய் சமநிலை இல்லாத நிலையை இது காட்டுவதாகவும் ஒரு ஆய்வில் தெரியவந்துள்ளது.

ஆக்ஸ்போம் ஹவர்ஸ் என்னும் ஒர் சர்வதேச அமைப்பு, இந்திய மக்களிடையே வருவாய் சமநிலை, சொத்துக்களின் சதவீதம் உள்ளிட்ட காரணிகளை அடிப்படையாக கொண்டு நடப்பாண்டில் ஆய்வு மேற்கொண்டது. தற்போது இந்த ஆய்வறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையின்படி, இந்தியாவின் 73 சதவீத சொத்துக்கள் / வளங்கள், 1 சதவீத மக்களிடம் தான் உள்ளது. வருவாய் சமநிலை இல்லாததே இதற்கு முக்கிய காரணம்.  உதாரணமாக கார்மென்ட்ஸ் துறையில் பணியாற்றும் கடைநிலை ஊழியர், அத்துறையின் அதிக சம்பளம் வாங்கும் அதிகாரியை போல் உயர, அவருக்கு 941 ஆண்டுகள் பிடிக்கும் என்ற அதிர்ச்சி தகவலும் அதில் வெளியாகியுள்ளது.

இந்த நிலையானது இந்தியாவில் மட்டுமல்லாது சர்வதேச அளவிலும் உள்ளது. சென்ற ஆண்டில், சர்வதேச அளவில் ஈட்டப்பட்ட 82 சதவீத சொத்துக்கள், 1 சதவீத மக்களிடம் சென்று சேர்ந்துள்ளன.

அதற்கு முந்தைய ஆண்டின் ஆய்வின்படி, நாட்டின் 1 சதவீத மக்களிடம் 58 சதவீத சொத்துக்கள்/ வளங்கள் இருந்ததாகவும், அது தற்போது 20.9 லட்சம் கோடிகள் அதிகரித்து அதே 1 சதவீத மக்களிடம் 73 சதவீத சொத்துக்கள் உள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.

மத்திய அரசின் 2017-18 நிதியாண்டின் பட்ஜெட்டிற்கான மதிப்பு 20.9 லட்சம் கோடி என்பது குறிப்பிடத்தக்கது.