பெங்களூரு

பெங்களூரு நகரில் தலைக்கு மேல் செல்லும் 7250 கிமீ தூர மின்சார ஒயர்கள் ரூ.1400 கோடி  செலவில் பூமியில் புதைக்கப்பட உள்ளது.

பெங்களூரு நகரில் மின்சார விநியோகம் செய்யும் மின் வாரியத்துக்கு பெஸ்காம் எனப் பெயர் உள்ளது.   பெஸ்காம் தற்போது தானியங்கி விநியோக முறைக்கு மாற உள்ளது.  இதன் மூலம் அதிக அளவில் இணைப்புக்களை விரைவாக இயக்க முடியும்.   இதற்காக தற்போது தலைக்கு மேல் செல்லும் மின்சார ஒயர்களை தரைக்குள் பதிக்க உள்ளது.

நகரில் மொத்தம் 7250 கிமீ தூரத்துக்குத் தலைக்கு மேல் செல்லும் ஒயர்கள் உள்ளன. இவற்றில் 2393 கிமீ தூரத்துக்கு 11 கிலோ வோல்ட் அதிக அழுத்த மின்சாரம் செல்லும் ஒயர்கள் உள்ளன.  இதற்காக ரூ.1400 கோடி செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.  இந்த தொகையை ஆசியன் டெவலப்மென்ட் வங்கி கடனாக அளிக்க உள்ளது.

இவ்வாறு பூமிக்கு அடியில் புதைக்கப்படுவதால் பல நன்மைகள் உள்ளதாகச் சொல்லப்படுகிறது.  குறிப்பாக மின் திருட்டு குறையும் எனவும் ஒயர் விழுந்து விபத்து உண்டாவதும் குறையும் என எதிர்பார்ப்பு உள்ளது.  கடந்த வருடம் மட்டும் 8000 வீடுகளின் மீது உயர் அழுத்த ஒயர்கள் அறுந்து விழுந்து விபத்துக்கள் ஏற்பட்டுள்ளன.  இன்னும் சில தினங்களில் தொடங்க உள்ள இந்த பணியை முடிக்க 18 மாதங்கள் ஆகும் என பெஸ்காம் தெரிவித்துள்ளது.