சென்னை: தேமுதிக தலைவரும், நடிகருமான விஜயகாந்தின் 71ஆவது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, தேமுதிக தலைமை அலுவலகத்துக்கு வருகை தந்த விஜயகாந்த், கட்சி நிர்வாகிகள், தொண்டர்களை சந்தித்தார். இது தேமுதிகவினரிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த சில ஆண்டுகளாக உலல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற வரும் விஜயகாந்தின் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டதாக தகவல் பரவியது. இது அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதையடுத்து, அது வதந்தி என்றும், பிறந்தநாளன்று அவர் தொண்டர்களை சந்திப்பார் என்றும் அறிவிக்கப்பட்டது. தன்னுடைய உடல்நலன் பற்றி யாரும் நம்ப வேண்டாமெனவும், தான் நலமுடன் இருப்பதாகவும், தேமுதிக நிர்வாகிகள், தொண்டர்களை நேரில் தன் பிறந்தநாளை முன்னிட்டு நேரில் சந்திப்பதாவும் விஜயகாந்த் நேற்று அறிக்கை பகிர்ந்து தெரிவித்திருந்தார். மேலும் தொண்டர்கள் யாரும் தன்னைப் பார்க்க வரும்போது சால்வை, மாலை உள்ளிட்ட அன்பளிப்புகளை தவிர்க்குமாறும் விஜயகாந்த் தன் அறிக்கையில் கோரியிருந்தார்.
இதையடுத்து, இன்று தனது 71வது பிறந்தநாளை முன்னிட்டு விஜயகாந்த் கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகம் வருகை தந்தார்.
தேமுதிக மாவட்டச் செயலாளர்கள் மற்றும் ரசிகர்களை விஜயகாந்த் இன்று தன் கட்சி அலுவலகத்தில் சந்தித்து வருகிறார். சென்னை, கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் கட்சி தொண்டர்களை விஜயகாந்த் சந்தித்து வரும் நிலையில், இன்று காலை முதலே அங்கு ரசிகர்களும் கட்சித் தொண்டர்களும் கூடத் தொடங்கினர். அவர்களையும் சந்தித்து வருகிறார்.
இந்த காட்சிகள், தேமுதிக கட்சித் தலைமை அலுவலகத்தில் எல்.இ.டி திரை வைத்து ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது. மேலும், பல்வேறு, கலை நிகழ்ச்சிகளுக்கும் நடைபெற்று வரும் நிலையில், விஜயகாந்த் பட பாடல் வரிகளுக்கு ஏற்ப தொண்டர்கள் நடனமாடி கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
விஜயகாந்த் மேடைக்கு வரும்போது, தவசி படத்தின் ‘ஏலே இமயமலை’ பாடல் பின்னணியில் ஒலிக்க விஜயகாந்த் மேடைக்கு அழைத்து வரப்பட்ட நிலையில், உற்சாகமாக தொண்டர்களைப் பார்த்து கையசைத்தார். உடல்நிலை காரணமாக தொண்டர்களை சந்திப்பதை சில காலமாக விஜயகாந்த் தவிர்த்து வந்த நிலையில், அவரை சிறு இடைவெளிக்குப் பிறகு நேரில் சந்தித்த தொண்டர்கள் ஆர்ப்பரித்தனர்.
நடிகர் விஜயகாந்த் ஒவ்வொரு ஆண்டும் தன் பிறந்தநாளை வறுமை ஒழிப்பு தினமாகக் கடைபிடித்து வருவதுடன், பல்வேறு நலத்திட்டப் பணிகளையும் மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.