டில்லி:

2017ம் ஆண்டில் 7 ஆயிரம் கோடீஸ்வரர்கள் இந்தியாவை விட்டு வெளியேறியுள்ள தகவல் வெளியாகியுள்ளது. இது முந்தைய ஆண்டை விட 16 சதவீதம் அதிகமாகும். கோடீஸ்வரர்கள் வெளியேறுவதில் இந்தியா தற்போது 2வது இடத்தை பிடித்துள்ளது.

 

‘புதிய உலகத்தின் சொத்து’ என்ற அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘ 2015ம் ஆண்டில் இந்தியாவை சேர்ந்த 4 ஆயிரம் கோடீஸ்வரர்கள் வெளிநாடுகளுக்கு சென்றுவிட்டனர். 2016ம் ஆண்டில் 6 ஆயிரம் பேரும், 2017ம் ஆண்டில் 7 ஆயிரம் பேரும் வெளிநாடுகளில் குடியேறிவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

2017ம் ஆண்டில் சீனாவில் இருந்து 10 ஆயிரம் கோடீஸ்வரர்கள் வெளியேறியதன் மூலம் அந்நாடு முதலிடத்தில் உள்ளது. 2வது இடத்தில் இந்தியா உள்ளது. துருக்கியில் இருந்து 6 ஆயிரம் பேரும். ஐக்கிய பேரரசில் இருந்து 4 ஆயிரம் பேரும், பிரான்சில் இருந்து 4 ஆயிரம் பேரும், ரஷ்யா கூட்டமைப்பில் இருந்து 3 ஆயிரம் பேரும் வெளியேறியுள்ளனர்’’ என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், அந்த அறிக்கையில், ‘‘இந்திய கோடீஸ்வரர்கள் அமெரிக்கா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், கனடா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து போன்ற நாடுகளுக்கு சென்றுவிட்டனர். சீனர்கள் அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா நாடுகளுக்கு சென்றுவிட்டனர். இவர்கள் மூலம் செல்வங்கள் வெளிநாடுகளுக்கு செல்வதை இந்த 2 நாடுகளும் கண்டு கொள்வது கிடையாது. இதை விட அதிகளவில் செல்வங்கள் உருவாக்கப்படுவது தான் இதற்கு காரணம். இங்கு வாழ்க்கை தரம் கூடினால் வெளியேறியவர்கள் திரும்பி வருவார்கள்.

2017ம் ஆண்டில் அதிகபட்சமாக 10 ஆயிரம் கோடீஸ்வரர்கள் குடியேறியதன் மூலம் ஆஸ்திரேலியா முதலிடத்தில் உள்ளது. இதற்கு போட்டியான அமெரிக்காவை தொடர்ந்து 3வது ஆண்டாக பின்னுக்கு தள்ளியுள்ளது’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘‘இதன் மூலம் 10 ஆண்டுகளில் ஆஸ்திரேலியாவில் இத்தகைய சொத்து 83 சதவீதம் அதிகரித்துள்ளது. அமெரிக்காவில் இது 20 சதவீதமாக உள்ளது. 9 ஆயிரம் பேருடன் அமெரிக்கா 2வது இடத்தில் உள்ளது. கனடா 5 ஆயிரம், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் 5 ஆயிரம் பேருடனும் அடுத்த இடங்களை பிடித்துள்ளது.

செல்வ வளம் மிக்க நாடுகளில் பட்டியலில் 8 ஆயிரத்து 230 பில்லியன் டாலர் மதிப்புடன் 6வது இடத்தில் உள்ளது. இங்கு பல கோடிகளுக்கு அதிபதியாக 20 ஆயிரத்து 730 பேர் உள்ளனர். இது உலகளவில் 7வது இடமாகும்.ஒரு கோடீஸ்வரர் என்பது 100 கோடி டாலர் அல்லது அதற்கு மேல் உள்ளவர்கள் என்று மதிப்பிடப்படுகிறது.

உலகளவில் 95 ஆயிரம் கோடீஸ்வரர்கள் பிற நாடுகளில் குடியேறியுள்ளனர். இதில் 2016ல் 82 ஆயிரம் பேரும், 2015ல் 64 ஆயிரம் பேரும் குடியேறியுள்ளனர்’’ என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. .