சென்னை:

சென்னையில் ஏற்பட்டுள்ள வரலாறு காணாத தண்ணீர் பிரச்சினையை சமாளிக்க, சென்னையில் உள்ள 210 நீர்நிலைகள் சீரமைக்கப்பட்டு அதில் சுமார்  700 டிஎம்சி தண்ணீர் சேமிக்க முடியும் என்று தமிழக அரசு தெரிவித்து உள்ளது.

இதில் பல நீர்நிலைகள் ஆக்கிரமிக்கப்பட்டு கட்டிடங்களாக உருமாறி உள்ள நிலையில், மக்களை ஏமாற்றும் வகையில் கண்ணாமூச்சி காட்டி வருகிறது தமிழக அரசு.

சென்னையை சுற்றியுள்ள சுமார் 210 நீர்நிலைகளை தூர்வாரும் பணி நடைபெற்று வருவதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பது போன்றுள்ளது..

தமிழகத்தில் கடும் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. குறிப்பாக தலைநகர் சென்னையில் கடுமையான குடிநீர் பஞ்சம் எழுந்துள்ளது. எங்கு பார்த்தாலும் பொதுமக்கள் காலிக் குடங்களுடன் தண்ணீருக்காக அலையும் வேதனையை காண முடிகிறது.

கடந்த 2 ஆண்டுகளோக  பருவமழை பொய்த்த நிலையில், நடப்பாண்டின் தண்ணீர் தேவைக்காக மாநில அரசு உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்காத நிலையில், தண்ணீருக்காக மக்கள் அல்லாடும் நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

சென்னை மற்றும் அதைச்சுற்றி மட்டும் சுமார் 210 நீர்நிலைகள் இருந்ததாக கூறப்படுகிறது. இதில் பல நீர்நிலைகள் அடுக்குமாடி குடியிருப்புகளாகவும், குடிசைகளாகவும் மாற்றப்பட்ட நிலையில், மீதமிருக்கும் நீர்நிலைகளையாவது தூர்வாரி நீரை சேமித்தால் ஓரளவுக்கு தண்ணீர்  தேவையை சமாளிக்கம் என்று கூறப்படுகிறது.

ஆனால், சென்னை மாநகராட்சியோ 210 நீர்நிலைகள் மறுசீரமைக்கப்பட்டு வரவதாகவும், அதன் காரணமாக சுமார் 700 டி.எம்.சி.டி.க்கு மேல் தண்ணீர் சேமிக்க முடியும் என்று சல்ஜாப்பு கூறி உள்ளது.

சென்னைக்கு நீர் ஆதாரங்களாக விளங்கும் ஏரிகள் வறண்டு போய்விட்டன. இதனால் நிலத்தடி நீர் மட்டமும் குறைந்துபோனது.   இந்த நிலையில்,  சென்னை கார்ப்பரேஷன் அதன் எல்லைக்குள் உள்ள 210 நீர்நிலைகளில், நகரத்தின் நீர் பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில்  மறுசீரமைப்பு பணிகளை மேற்கொள்ளப்பட உள்ளதாக தெரிவித்து உள்ளது. மேலும், சுற்றுச்சூழல் பாதிப்படை யாத வகையில் மறுசீரமைப்பு பணிகள் செய்யப்படும் என்றும், கழிவுநீரை நீர்நிலைகளில் கலப்பது போன்ற அத்துமீறல்கள் தடுக்கப்படும் என்றும் என்றும் அறிவித்து உள்ளது.

சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில் அதிர்ச்சி கர தகவல் தெரியவந்துள்ளது. அதாவது, சென்னை மாநகரில் 210 நீர் நிலைகள் இருப்பதாகவும், அந்த நீர் நிலைகளை மேம்படுத்த தமிழக முதல்வர் பழனிசாமி சிறப்பு திட்டத்தை முன்னெடுத் துள்ளார். அதன்படி, ரூ.5.95 கோடி மதிப்பீட்டில் 5 நீர் நிலைகள் ஏற்கனவே தூர்வாரப்பட்டு விட்டன.  ரூ.18.20 கோடி மதிப்பீட்டில் 52 நீர் நிலைகள் மறுசீரமைக்கப்பட்டு வருகின்றன. இரண்டு பெரிய நீர் நிலைகள் ரூ.25.29 கோடி செலவில் விரைவில் சீரமைக்கப்பட உள்ளன எனத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.  இதன்மூலம் இதுநாள் வரை வெறும் 5 நீர் நிலைகள் மட்டும் தூர்வாரி சீரமைக்கப்பட்டு உள்ளது

இந்த நிலையில், தற்போது அதிகாரிகள் நீர்நிலைகள் குறித்து தங்களது ஆய்வை தொடங்கி உள்ளனர். அதையடுத்து சுமார்  70 நீர்நிலைகளின் சேமிப்புத் திறனை அதிகரிக்கும் பணிகள் தொடங்கி இருப்பதாகவும், இந்த பணிகள்  விரைவில் நிறைவடையும் என்றும் கூறி வருகின்றன.

மேலும், குடியிருப்பாளர்கள் சங்கங்கள் மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்களும் அந்தந்த வட்டாரங் களில் உள்ள மழைநீர் சேகரிப்பு தொட்டிகளின் சுற்றுச்சூழல் மறுசீரமைப்பு பணிகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டு வருவதாகவும் தெரிவித்து உள்ளது.

எல்லாம் கண்கெட்ட பிறகே சூரிய சமஸ்காரம்… போல தண்ணீர் பிரச்சினை தலைவிரித் தாடும் நிலையில், தற்போதுதான் அதிகாரிகள் தங்களது பணிகளையே  தொடங்கி உள்ளது தெரிய வந்துள்ளது. இவர்கள் எப்போது பணியை முடித்து, எப்போது மழை பெய்து, எப்போது மழைநீரை சேமிக்கப்போகிறார்களோ… 

கடந்த ஆண்டே தண்ணீர் தட்டுப்பாடு குறித்து மாநில அரசு விவரம் அறிந்திருக்கும். எனவே நடப்பாண்டிற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அப்போதே தொடங்கி இருக்க வேண்டும் .

ஆனால், தமிழக அரசு தனது ஆட்சியை காப்பற்றுவது குறித்தே முழு நேரமும் சிந்தித்துக் கொண்ட இருப்பதால், தமிழக மக்கள் மீதோ, தமிழக பிரச்சினைகள் மீதோ கவனம் கொள்ளாமல் தான்தோன்றித்தனமாக செயல்பட்டு வருகிறது. அதன்விளைவுதான் இன்று  தமிழகத்தில் எழுந்துள்ள தண்ணீர் பிரச்சினை.  தமிழக மக்கள் மீதான அரசின் அலட்சியத் தன்மையை இது மேலும் ஒரு எடுத்துக்காட்டு.

தற்போதய நிலவரப்படி சென்னைக்கு தண்ணீர் தரும் முக்கிய 4 ஏரிகளில் வெறும்  0.20% அளவிலான தண்ணீர் மட்டுமே உள்ளது.  சோளவரம் மற்றும் ரெட்ஹில்ஸ் ஏரிகள் 100 சதவிகிதம் வறண்டு  போன நிலையில், செம்பரம்பாக்கம் ஏரியில் ஒரு எம்.சி.டி நீரும், பூண்டி ஏரியில் 22 எம்.சி.டி தண்ணீரும் உள்ளது குறிப்பிடத்தக்கது.