வேலை கேட்ட சிறுமிக்கு கடிதம் எழுதிய “கூகுள்” சுந்தர்பிச்சை

Must read


லண்டன் ஹியர்ஃபோர்ட் பகுதியைச் சேர்ந்த ஏழு வயது சிறுமி கோலெ பிரிட்ஜ்வாட்டர் கூகுள் நிறுவனத்தின் தலைமைச் செயலதிகாரி சுந்தர் பிச்சைக்கு கூகுள் நிறுவனத்தில் வேலை கேட்டு எழுதிய கடிதம் சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவியது. அந்த சிறுமிக்குக் கூகுள் சுந்தர் பிச்சை பதில் கடிதம் தற்போது அனுப்பியுள்ளார்.

சிறுமி தன் கைப்பட எழுதியனுப்பிய கடிதத்தில்

அன்புள்ள கூகுள் தலைவரே,
என் பெயர் சோலே. நான் கூகுளில் வேலை செய்ய விரும்புகிறேன். சாக்லேட் ஃபேக்ட்ரியில் பணிபுரியவும் விருப்பம் உள்ளது. மேலும், ஒலிம்பிக்ஸ் பந்தயத்தில் நீச்சல் போட்டியில் பங்கேற்க ஆசையிருப்பதாவும், இதற்காக வாரந்தோறும் சனி மற்றும் செவ்வாய் கிழமைகளில் நீச்சல் பயிற்சிக்குச் செல்கிறேன்.

கூகுள் நிறுவனத்தில் பணி புரிய வேண்டும் என்பதே என் விருப்பம். கூகுள் நிறுவனத்தில் வேலை செய்தால், பீன்ஸ் பேக் எனும் இருக்கையில் அமர்ந்து வேலை பார்க்கலாம் என்றும் அங்கு வேலை பார்ப்பது ஒரு விளையாட்டு போன்று இருக்கும் என்றும் எனது தந்தை கூறினார்.

நான் தற்போது டப்லெட் பயன்படுத்தி வருகின்றேன். அதில்; ரோபோட் விளையாட்டுக்கள் மற்றும் பலவற்றை கற்றுக் கொள்வதுடன் கணினிகுறித்து அனைத்தையும் அறிந்து வருகின்றேன்.

கணினி மீதுள்ள என்னுடைய ஆர்வத்தினைப் பார்த்து என் தந்தை விரைவில் கணினி வாங்கி தருவதாகத் தெரிவித்துள்ளார்.

அதுமட்டுமின்றி, கூகுளில் பணிபுரிய வேண்டும் என்றால், உங்கள் ஈ-மெயில் முகவரிக்கு விண்ணப்பம் அனுப்ப வேண்டும் என்று என் தந்தை கூறியதால், இந்தக் கடிதத்தை எழுதியுள்ளேன், நிச்சயம் ஒரு நாள் கூகுளில் பணிபுரிவேன்.
நான் எழுதிய இரண்டாவது கடிதம் இது. எனது முதல் கடிதத்தை என் தந்தைக்கு கிறிஸ்துமஸ் வாழ்த்து சொல்ல எழுதினேன். குட் பை. என் கடிதத்தைப் படித்தமைக்கு நன்றி.

இதற்குக் கூகுள் நிறுவனத்தின் தலைமை அதிகாரி உடனடியாகப் பதில் கடிதம் அனுப்பியுள்ளார்.

பல்வேறு பணிச்சுமைகளுக்கிடையே இந்தச் சிறுமியை ஊக்குவிக்கும் வகையில் கூகுள் தலைமைச் செயல் அதிகாரி சுந்தர் பிச்சை பிப்ரவரி 3ம் தேதியிட்ட பதில் கடிதத்தில்

” அன்புள்ள கோலெ பிரிட்ஜ்,
நீ எனக்குக் கடிதம் எழுதியதற்கு மிக்க நன்றி. உனக்கு ரோபோக்கள், கம்ப்யூட்டர்களை பிடித்திருப்பது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. தொழில்நுட்பம் சார்ந்து தொடர்ந்து படிப்பாயென நம்புகிறேன். உனது கனவு மற்றும் இலக்குகளை மனதில் வைத்துக் கடினமாக உழைத்தால் நீ மனதில் நினைத்தவற்றை நிறைவேற்றலாம்.

கூகுளில் பணியாற்றுவதிலிருந்து ஒலிம்பிக்ஸ்-ல் நீச்சல் போட்டியில் கலந்து கொள்வது வரை அனைத்தும் சாத்தியம். பள்ளி படிப்பை முடித்தபின் கூகுளில் பணியில் சேர உனது விண்ணப்பத்தை எதிர்நோக்கி காத்திருப்பேன். உனக்கும் உன் குடும்பத்தாருக்கும் எனது வாழ்த்துக்கள்”. இவ்வாறு சுந்தர் பிச்சை கூறியுள்ளார்.

இந்தக் கடிதத்தைப் பார்த்து கோலெ பிரிட்ஜ்சின் குடும்பத்தினர் அனைவரும் இன்ப அதிர்ச்சியில் உள்ளனர்.

 

More articles

Latest article