சென்னை: பண்டிகைகள் நெருங்கி வருவதால் மேலும் 7 சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
கொரோனா பரவல் காரணமாக பயணிகள் ரயில் போக்குவரத்து மார்ச் 24ம் தேதி முதல் ரத்து செய்யப்பட்டது. பின்னர் சிறப்பு ரயில்கள் மட்டுமே இயக்கப்பட்டாலும், பயணிகளின் கோரிக்கைக்கு ஏற்ப முக்கிய வழித்தடங்களில் சிறப்பு ரயில்களை இயக்க ரயில்வே வாரியம் அனுமதி அளித்து வருகிறது.
தற்போது கிறிஸ்துமஸ், புத்தாண்டு, பொங்கல் போன்ற பண்டிகைகள் வர உள்ளதால் ரயில்களில் முன்பதிவு அதிகரித்து வருகிறது. சென்னையில் இருந்து பல்வேறு நகரங்களுக்கு செல்லும் ரயில்கள் நிரம்பி வருகின்றன.
இதையடுத்து, 7 சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. சென்னை சென்ட்ரலில் இருந்து வரும் 14ம் தேதி முதல் டிசம்பர் 31 வரை நாள்தோறும் தினசரி இரவு 9.15 மணிக்கு சிறப்பு கட்டண ரயில் புறப்பட்டு மறுநாள் காலை 6.30 மணிக்கு மைசூரு செல்கிறது. மறுமார்க்கமாக மைசூரில் இருந்து வரும் 15ம் தேதி முதல் ஜனவரி 1 வரை தினசரி இரவு 9 மணிக்கு சிறப்பு ரயில் புறப்பட்டு மறுநாள் காலை 6.40 மணிக்கு சென்டரல் ரயில் நிலையம் வந்து சேருகிறது.
நெல்லையில் இருந்து நாளை 13, 20, 27 ஆகிய தேதிகளில் மதியம் 1.15 மணிக்கு சிறப்பு ரயில் புறப்பட்டு 2ம் நாள் இரவு 9.35 மணிக்கு சத்தீஸ்கர் மாநிலம் பிலாஸ்பூர் சென்று சேரும். மறுமார்க்கத்தில் பிலாஸ்பூரில் இருந்து வரும் 15, 22, 29 ஆகிய தேதிகளில் காலை 8.15 மணிக்கு சிறப்பு ரயில் புறப்பட்டு 3ம் நாள் அதிகாலை 3.15 மணிக்கு நெல்லை வந்து சேரும்.
இதுபோன்று நெல்லையில் இருந்து வரும் 16, 23, 30 ஆகிய தேதிகளில் காலை 7.15 மணிக்கு வாராந்திர சிறப்பு கட்டண ரயில் புறப்பட்டு 2ம் நாள் பிற்பகல் 3 மணிக்கு மும்பை தாதரை சென்றடையும். மறுமார்க்கமாக தாதரில் இருந்து வரும் 17, 24, 31 ஆகிய தேதிகளில் இரவு 8.40 மணிக்கு புறப்பட்டு 3ம் நாள் அதிகாலை 4 மணிக்கு நெல்லை வரும். மங்களூர் சென்ட்ரல்-மும்பை சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவும் தொடங்கி உள்ளது.