சூளகிரி பகுதியில் தொழிற்சாலை கட்டுமான பணியில் ஈடுபட்டு வந்த வடமாநில கட்டுமான தொழிலாளர்கள் ஓசூரைச் சேர்ந்த உள்ளூர் நபரை திருடன் என நினைந்து கட்டிவைத்து உதைத்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கட்டுமானம், வணிக நிறுவனங்கள், தொழிற்சாலைகள், உணவகங்கள், செக்யூரிட்டி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் காலநேரமின்றி இருபத்தி நான்கு மணிநேரமும் சுழற்சி முறையில் கொத்தடிமைகள் போல் வேலைபார்க்க வேலைவாய்ப்பின்றி தவித்துவரும் ஆயிரக்கணக்கான வடமாநில இளைஞர்கள் தமிழ்நாடு உள்ளிட்ட தென்மாநிலங்களுக்கு படையெடுத்து வருவது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இதுபோன்ற இளைஞர்களை பீகார், உத்தரகண்ட், சத்தீஸ்கர், அசாம் உள்ளிட்ட பல்வேறு வடக்கு மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் இருந்து ஏஜெண்டுகள் போல் செயல்படும் சிலர் மொத்தமாக அனுப்பிவைப்பதாகக் கூறப்படுகிறது.

மொழி, நிறம், கலாச்சாரம் ஆகிய வேறுபாடுகளால் இவர்கள் தனியாக அடையாளம் காணப்பட்டாலும், வெளிமாநிலத்தில் இருந்து பிழைக்க வரும் இவர்களுக்குள் ஒரு வித அச்சஉணர்வு காரணமாக ஐ.டி. உள்ளிட்ட நிர்வாக பணிகள் தவிர மற்ற தொழிலாளர்கள் குழுக்களாகவே தங்கி வேலைபார்த்து வருகின்றனர்.

அச்சஉணர்வு காரணமாகவும் குழுவாக இருப்பதன் காரணமாகவும் குறுகிய காலம் மட்டுமே இங்கு இருக்கப்போவதால் உள்ளூர் மக்களுடன் இணக்கமாக செல்லாமல் சிறு சிறு விஷயங்களுக்கு மோதலில் ஈடுபடுவதும் அண்மைக் காலமாக அதிகரித்து வருகிறது.

இந்த நிலையில், சேலம் மாவட்டம் மேச்சேரி அருகே கந்தனூரைச் சேர்ந்த பிரபாகரன் (33) என்பவர் சூளகிரி அருகே உள்ள சின்னாறு பகுதியில் காய்கறிகள் மற்றும் பழங்கள் பதப்படுத்தும் நிறுவனத்துக்கு நடைபெறும் கட்டுமான பணிக்கு சில நாட்களுக்கு முன்பு சேர்ந்திருக்கிறார்.

ஓசூரைச் சேர்ந்த ஒப்பந்ததாரர் மணி என்பவரது கீழ் பணி செய்து வரும் பிரபாகரன், 28-ம் தேதி இரவு கட்டிடப் பணி நடைபெறும் பகுதியில் அமர்ந்திருந்தார்.

அப்போது அங்கு வந்த பொறியாளர் தங்கராஜ் மற்றும் வட மாநிலத் தொழிலாளர்கள் 5 பேர் சேர்ந்து பிரபாகரனை திருடன் என நினைத்து அவரை 2 நாட்களாகக் கட்டி வைத்து தாக்கினர்.

இரண்டு நாட்கள் கழித்து இதுகுறித்து தகவலறிந்து வந்த போலீசார் பிரபாகரனை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

மேலும், இது தொடர்பாக ஒப்பந்ததாரர் மணி, பொறியாளர் தங்கராஜ் மற்றும் வடமாநில இளைஞர்கள் 5 பேரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.