மதுரை: மதுரை இந்து மக்கள் கட்சி நிர்வாகி கொலையில் போலீசார் உள்பட 7 பேர் கைது செய்யப்பட்டு உள்ளது. இது தொடர்பான விசாரணையில் பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது. அதில்,  காவலரின் மனைவியுடன் ந்து மக்கள் கட்சி நிர்வாகி  கள்ள தொடர்பில் இருந்தது தெரிய வந்துள்ளது. இதனால், போலீஸ்காரர்,  கூலிப்படை வைத்து கொலை செய்தது அம்பலமாகி உள்ளது.

மதுரை ஜெய்ஹிந்த்புரம் அருகே கடந்த சில நாட்களுக்கு முன்பு  இந்து மக்கள் கட்சி நிர்வாகி மர்ம நபர்களால் வெட்டிக் படுகொலை செய்யப்பட்டார். மதுரை சோலை அழகுபுரம் பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன் (40). இவர் ஜெய்ஹிந்தபுரம் அருகே உள்ள எம்.கே புரத்தில் நகைக்கடை நடத்தி வருகிறார். மேலும் இவர் இந்து மக்கள் கட்சியில் தென்மாவட்ட துணை செயலாளராகவும் செயல்பட்டு வந்தார்.

சம்பவத்தன்று இரவு அவரது நகைக்கடைக்கு அருகே அவர் சென்று கொண்டிருந்த போது பின்னால் வந்த இரண்டு மர்ம நபர்கள் கல் மற்றும் அறிவாளால் கொடூரமாக தாக்கியுள்ளனர். இதில் படுகாயமடைந்த மணிகண்டன் மீட்கப்பட்டு அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார். இதுகுறித்து ஜெய்ஹிந்தபுரம் காவல் துறையினர் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விசாரணையில், மணிகண்டன்,  மதுரை மாநகர் வில்லாபுரம் தமிழ்நாடு குடியிருப்பு நல வாரிய வீட்டில் தனது மனைவி லெட்சுமி மற்றும் இரண்டு குழந்தைகளுடன் வசித்து வருவது தெரிய வந்தது. மேலும்,  ஜெய்ஹிந்த்புரம் காவல்நிலைய குற்றப்பிரிவு காவலரான ஹரிஹரபாபு என்பவரின் மனைவிக்கும் அவருக்கும் கள்ளத்தொடர்பு இருந்ததும் தெரிய வந்துள்ளது.

சில நாட்களுக்கு முன்பாக ஜெய்ஹிந்த்புரம் காவல் நிலையத்தின்  காவலர் ஹரிஹரபாபு எதேச்சையாக மனைவியின் செல்போனை எடுத்துபார்த்தபோது மணிகண்டனுடன்,  தனது மனைவியும் சேர்ந்து இருப்பது போன்ற புகைப்பங்களும், இருவரும்  பல்வேறு இடங்களுக்கு சென்று போட்டோ எடுத்துள்ளதையும் பார்த்தார்.   தனது மனைவியுடன் தவறான எண்ணத்தில் தொடர்பில் இருந்த இந்து மக்கள் கட்சி நிர்வாகி மணிகண்டனை ஜெய்ஹிந்த்புரம் காவல்நிலையத்தில் குற்றவழக்குகளில் தொடர்புடையவர்களை நீதிமன்றத்தில் சந்தித்த போது அவர்களை பயன்படுத்தி அவரை மிரட்டி மனைவியுடனான நட்பை தடுக்கலாம் என நினைத்துள்ளார்.

இதைத்தொடர்ந்தே,  குற்றவழக்குகளில் தொடர்புடையை கூலிப்படையினரை பயன்படுத்தி   மணிகண்டனை கொலை செய்தது தெரிய வந்துள்ளது. கொலைக்கான காரணம் குறித்து நடத்தப்பட்ட விசாரணையில் காவலரான ஹரிஹர பாபு, குற்றவழக்குகளில் தொடர்புடைய தூத்துக்குடியை சேர்ந்த மாடு தினேஷ், ஜெய்ஹிந்த்புரம் பகுதியை சேர்ந்த குட்ட அஜித், அய்யப்பன், பல்லு கார்த்திக், புறா பாண்டி , ஹைதர் அலி ஆகியோர் மூலம் மணிகண்டனை கொலை செய்வதற்காக 75ஆயிரம் ரூபாய் கூலியாக கொடுத்துள்ளார். இதனையடுத்து அந்த கும்பல் மணிகண்டனை சரமாரியாக அரிவாளால் வெட்டியும், கத்தியால் குத்தியும் கொலை செய்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதனையடுத்து காவலர் ஹரிஹர பாபு உள்ளிட்ட 7 பேரை ஜெய்ஹிந்த்புரம் காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.