பழனி: பழனி அருகே ஆயக்குடி பகுதியில் செயல்பட்டு வரும் ஆதிதிராவிடர் மாணவியர் விடுதியின் மேற்கூரை இடிந்து விழுந்ததில், அதன் கீழே அமர்ந்திருந்த 5 மாணவிகள் உள்பட 7 பேர் காயமடைந்தனர். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அறுபடை முருகன் கோவிலில் ஒன்றான பழனி அருகே உள்ளது ஆயக்குடி. இந்த பகுதியில், ஏழை எளிய ஆதிதிராவிட மாணவிகள் தங்கி படிக்கும் வகையில், ஆதிதிராவிடர் மாணவிகள் விடுதி செயல்பட்டு வருகிறது. கடந்த 2007-ம் ஆண்டு கட்டப்பட்டு நடைமுறையில் உள்ள இந்த விடுதி முறையாக பராமரிக்கப்படாமல், பல்வேறு இடங்களில் சிதிலமடைந்து ஆங்காங்கே விரிசலுடன் காணப்படுகிறது. இதுகுறித்து மாணவிகள் பல முறை புகார் அளித்த நிலையில், இதுவரை தமிழநாடு அரசோ, துறை அதிகாரிகளோ கண்டுகொள்ளவில்லை.
இந்த விடுதியில் தற்போது சுமார் 25க்கும் மேற்பட்ட மாணவிகள் தங்கி அருகே உள்ள பள்ளி, கல்லூரிகளில் படித்து வருகின்றனர். இந்த நிலையில், இன்று காலை விடுதி சமையல்காரர், அபிராமி என்பவர், விடுதி குழந்தைகளுக்காக உணவு தயாரித்து விட்டு மாணவிகளுக்கு காலை சிற்றுண்டி வழங்கிக் கொண்டு இருந்தார். அப்போது திடீரென விடுதியின் மேற்கூரை இடிந்து மாணவிகள் மீது விழுந்தது.
இதில் உணவு சாப்பிட்டுக் கொண்டு இருந்த மாணவிகள் நளினி, தர்ஷினி, ரெங்கநாயகி, தேவி மற்றும் சமையலர் அபிராமி உள்பட 7 பேர் காயமடைந்தனர்.
மாணவிகளின் அலறல் சத்தம் கேட்டு அருகே வாரச்சந்தையில் கூடி இருந்த வியாபாரிகள் ஓடி வந்து, இடிபாடுகளுக்குள் சிக்கிய மாணவிகளை வெளியே கொண்டு வந்து, பின்னர் ஆம்புலன்ஸ் மூலம் பழனி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இதுகுறித்து காவல்துறைக்கு புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து காவல்துறையினர் விரைந்து வந்த நிலையில், இது குறித்து தகவல் அறிந்ததும் கோட்டாட்சியர் சரவணன் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை மேற்கொண்டார். உடனே மற்ற மாணவிகளை, பாதுகாப்பு கருதி வேறு ஒரு கட்டிடத்துக்கு அனுப்பி வைத்தார்.
இதுகுறித்து கூறிய பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள், பல ஆண்டுகளாக இந்த விடுதி பராமரிப்பு இன்றி பாழந்து காணப்படுகிறது. இந்த சம்பம் பகல் நேரத்தில் நடந்ததால் உடனடியாக மாணவிகள் மீட்கப்பட்டு விட்டனர். இரவு நேரமாக இருந்திருந்தால் பெரும் அசம்பாவிதம் ஏற்பட்டு இருக்கும் என்று கூறினார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.