கோவை:  கோவையில், சட்டவிரோதமாக 1,244 டெட்டனேட்டர்கள் மற்றும் 622 ஜெலட்டின் குச்சிகளை வைத்திருந்த 7 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஏற்கனவே கோவையில் ஜமேஷே முபீன்  கார் வெடி விபத்து சம்பவத்தில் உயிரிந்த நிலையில், அதைத்தொடர்ந்து ஏராளமான வெடிகுண்டு தயாரிக்கும் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதுடன் பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பில் இருந்ததாக பலர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். இதனால் தமிழ்நாடு வெடிகுண்டு தாக்குதல்களில் இருந்து தப்பியது. இதையடுத்து மாநிலம் முழுவதும் காவல்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில்,  கோவை மாவட்டம், காரமடையில் ரோந்து பணியில் ஈடுபட்ட போலீசார், அப்பகுதியில் கைப்பையுடன் நின்று கொண்டிருந்த நான்கு நபர்களை சந்தேகத்தின் அடிப்படையில் விசாரித்தனர். அப்போது அவர்கள் வைத்திருந்த கைப்பையை சோதனை செய்து பார்த்தபோது, அதில் 650 எலக்ட்ரிக் டெட்டனேட்டர்கள் இருந்தது. அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில்,  டெட்டனேட்டர்கள் வைத்திரந்தவர்கள், கேரள மாநிலம் திருச்சூரை சேர்ந்த தினேஷ், ஆனந்த், காரமடையை சேர்ந்த சுரேஷ்குமார், திருவாரூரைச் சேர்ந்த செந்தில் குமார் என்பது தெரியவந்தது.

கட்டிடங்கள், குவாரிகள் உடைக்கப்பயன்படும் இந்த டெட்டனேட்டர்களை சட்டத்திற்கு புறம்பாக அதிக விலைக்கு  விற்பனை செய்து வந்துள்ளதும் தெரிய  வந்துள்ளது.   இதனையடுத்து இந்த வழக்கில் தொடர்புடைய ரங்கராஜ், கோபால், பெருமாள், சந்திரசேகரன் என மொத்தம் ஏழு பேரை போலீசார் கைது செய்தனர்.

அவர்களிடமிருந்து 622 ஜெலட்டின் குச்சிகள் மற்றம் 350 எலக்ட்ரிக் டெட்டனேட்டர்களை கைப்பற்றினர். பின்னர் கைதான அனைவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த சம்பவம் கோவை பகுதியில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.