ஹாங்காங்:

மோசமான காற்று மாசு நிறைந்த 10 நாடுகளில் இந்தியா 7-வது இடத்தில் உள்ளது.


இந்தியாவின் தலைநகர் புதுடெல்லியின் புறநகர் பகுதியான குருக்ராம் பகுதிதான் உலகத்திலேயே மோசமான மாசு நிறைந்த நகராகும். இங்கு வாழும் மக்கள் ஒவ்வொருவரும் தாங்கள் உடல்நலம் பாதிக்கப்பட்டதற்கான காரணம் காற்று மாசுவே என்பதையும் உணர்ந்துள்ளனர்.

காற்று மாசு அதிகரிப்பால் உலகம் முழுவதும் அடுத்த ஆண்டில் 70 லட்சம் உயிரிழப்பு ஏற்படும் அபாயம் உள்ளது என கிரீன்பீஸ் சவுத் ஏசியா அமைப்பின் ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இது குறித்து கிரீன்பீஸ் சவுத் ஏசியா செயல் இயக்குனர் யேப் சானோ கூறியதாவது:

இத்தகைய காற்று மாசு நம் வாழ்க்கையையும், எதிர்காலத்தையும் பாழாக்கிவிடும். காற்று மாசுவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காகவும், மருந்துகளுக்காக மட்டும் கடந்த ஆண்டில் உலகம் முழுவதும் 225 பில்லியன் டாலர் செலவழிக்கப்பட்டுள்ளது.

இத்தகைய பிரச்சினை தெற்காசியாவிலேயே அதிகம் உள்ளது. காற்று மாசு அதிகம் உள்ள 20 நாடுகளில் முதல் எட்டு இடத்தில் இந்தியா, பாகிஸ்தான்,பங்களாதேஷ் ஆகிய நாடுகள் உள்ளன.

அதிக மக்கள் தொகை கொண்ட லாகூர், டெல்லி, டாகா ஆகிய பெரு நகரங்கள் உலக அளவில் முறையே 10,11 மற்றும் 17-வது இடத்தில் உள்ளன.
பருவநிலை மாற்றம், காட்டுத் தீ ஆகியவை மோசமான காற்று மாசை ஏற்படுத்துகின்றன.

எரிபொருளை அதிகம் பயன்படுத்துவதும் காற்று மாசு ஏற்பட ஒரு காரணமாகிறது.
நம் உடல்நிலை குறித்து நம் தலைவர்கள் கவலைப்படுகிறார்களா? என்பதை நாம் அறிந்துகொள்ள வேண்டும்.

காற்றின் தரத்தின் அளவு பற்றி நமக்குச் சொன்னால்தான், உடல்நிலை மற்றும் பருவநிலை மாற்ற பிரச்சினைகளை நாம் எதிர்கொள்ள முடியும்.
தெற்காசிய நாடான சீனாவும் காற்று மாசுவால் பெரிதும் பாதிக்கப்பட்டிருந்தது.

சீன தலைநகர் பெய்ஜிங் உலக அளவில் காற்று மாசுவால் பாதிக்கப்பட்ட 100 நகரங்களில் ஒன்றாக இருந்தது. அங்கு மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளால் காற்று மாசு பாதிப்பு கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.

எனினும் சீனாவை ஒட்டிய இந்தோனேஷியா, தென்கொரியா, வியட்நாம் மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகள் காற்று மாசால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன என்றார்.