டெல்லி: வாரணாசியில் 7 வகை உருமாறிய கொரோனா கண்டுபிடிக்கப்பட்டு இருப்பதாக செல்லுலார் மற்றும் மூலக்கூறு உயிரியலுக்கான மையம் ஆய்வில் (Centre for Cellular and Molecular Biology – CCMB) தெரிய வந்துள்ளது.
உலகநாடுகளை புரட்டிப்போட்டுள்ள கொரோனா வைரஸ், சூழலுக்கு ஏற்ப தன்னை உருமாற்றிக்கொண்டு பரவி வருகிறது. அதன்படி இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்ட உருமாறிய கொரோனாவுக்கு டெல்டா என உலக சுகாதார நிறுவனம் பெயர் சூட்டியுள்ளது. இந்த வைரஸ்தான், இந்தியாவில் 2வது அலையாக பரவி, பெரும் உயிர்சேத்தை ஏற்படுத்தி வருகிறது.
இந்த நிலையில். உத்தரபிரதேச மாநிலத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால், செல்லுலார் மற்றும் மூலக்கூறு உயிரியலுக்கான மையம் சார்பில் (Centre for Cellular and Molecular Biology) வாரணாசி பகுதியில் கொரோனா பாதித்த 130 பேரைக் கொண்டு சில ஆய்வுகள் நடத்தியது. இதில், உருமாறிய ஏழு வகை கொரோனா வைரஸ் வகைகள் கண்டறியப்பட்டுள்ளதாக சிசிஎம்பி நிறுவனம் தெரிவித்து உள்ளது.
இந்த உருமாறிய ஏழு வகை கொரோனா வைரஸ்களில், ஏற்கனவே உலக சுகாதார நிறுவனம் தெரிவித்த டெல்டா மற்றும் பீட்டா வகை வைரஸ்களும் அடங்கும் என்றும், ஆய்வு நடத்தப்பட்ட கொரோனா நோயாளிகளில் 35 சதவிகிதம் பேருக்கு டெல்டா வகை வைரஸ் இருப்பதாகவும், தென்னாப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட B1351 வகை கொரோனா வைரஸ்கள் வாரணாசியில் கண்டுபிடிக்கப்பட்டு இருப்பதாகவும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த ஆய்வை அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சிலின் (சி.எஸ்.ஐ.ஆர்) ஒரு நிறுவனமான செல்லுலார் மற்றும் மூலக்கூறு உயிரியல் மையம் (சி.சி.எம்.பி) நடத்தி உள்ளது.