சென்னை

ஒரே  கும்பத்தை சேர்ந்த 7 பெண்கள் தமிழ்  திரையுலகில் பிரபல நாயகிகளாக வாழ்ந்துள்ளனர்

இந்தியாவில் வர்த்தகம் முதல் அரசியல் வரை அனைத்து துறைகளிலும் குடும்ப வாரிசுகளின் ஆதிக்கம் அதிகம் காணப்படுகிறது. அந்த வகையில், சினிமாவும் இதற்கு விதிவிலக்கல்ல. நடிகர்கள் முதல் தயாரிப்பாளர்கள் வரை தங்களது வாரிசுகளை சினிமா துறையில் களம் இறக்கி சினிமா குடும்பங்களாக மாறி விடுகின்றனர். இந்தியா முழுவதுமாக ஒவ்வொரு மொழி திரைப்படத்துறையிலும் சினிமா குடும்பங்கள் உள்ளன. ஆனால் ஒரு குடும்பத்தில் இருந்து 7 நாயகிகள், ஒரு இயக்குநர், ஒரு கேமராமேன் வந்து தமிழ் சினிமாவை ஆண்டனர் என்றால் நம்ப முடிகிறதா? உண்மைதான். தமிழ் சினிமாவின் ‘முதல் கனவுக்கன்னி’ டி.ஆர்.ராஜகுமாரி குடும்பம் தான் அது.

இந்த குடும்பத்தைப் பற்றி பேச வேண்டும் என்றால், அவரின் பாட்டி குஜலாம்பாளியிடம் இருந்து ஆரம்பிக்க வேண்டும். அந்நாளில் பிரபலமான கர்நாடக பாடகி. அவருக்குப் பிறந்த குழந்தைகள் தான் பின்னாளில் தமிழ் சினிமாவை ஆண்டனர். தஞ்சாவூர் தான் இவர்களின் பூர்வீகம். இந்த குடும்பத்தின் முதல் சினிமா என்ட்ரி எஸ்.பி.எல்.தனலட்சுமி. 1930களில் நடிகையாக ஜொலித்தவர் எஸ்.பி.எல்.தனலட்சுமி. இந்த குடும்பத்தின் முதல் தலைமுறை நடிகையும் இவர்தான். 1935ம் ஆண்டு நேஷனல் மூவி டோன் என்ற தயாரிப்பு கம்பெனியின் முதல் படம் ‘பார்வதி கல்யாணம்’. முதல் படம் என்பதால் அதில் நடிக்க தகுதியானவர்களை தமிழ்நாடு முழுவதும் தேடினார் அதன் தயாரிப்பாளர் மாணிக்கம். அந்த தேடலின் ஒரு பகுதியாக அவர் தஞ்சாவூர் சென்றபோது தனலட்சுமியின் நடன நிகழ்ச்சியை பார்த்துவிட்டு அவரையே தனது படத்தின் நாயகியாக தேர்வு செய்தார்.

தனலட்சுமியின் சகோதரி தமயந்தி. இவரும் 1930களில் நடிகையாக சில படங்களில் நடித்திருக்கிறார். அந்த வரிசையில் அடுத்ததாக இணைந்தவர் தான் டி.ஆர்.ராஜகுமாரி. முப்பதுகளின் இறுதியில் நடிகை எஸ்.பி.எல்.தனலட்சுமியை பார்க்கச் செல்கிறார் இயக்குநர் கே.சுப்பிரமணியம். அங்கே ராஜாயி என்ற சிறுமியின் சுட்டித்தனத்தைப் பார்க்கிறார். சிறுமி அழகியும்கூட. இயக்குநர்களின் பார்வையில் அழகான பெண்கள் அனைவரும் நடிகைகளாகவே தெரிவார்கள். கே.சுப்பிரமணியம் ராஜாயியின் பெயரை ராஜகுமாரி என்று மாற்றி தனது கச்ச தேவயானியில் (1941) நடிக்க வைத்தார். தனலட்சுமியின் சகோதரி மகள் தான் இந்த ராஜகுமாரி.

டி.ஆர்.ராஜகுமாரிக்கு முன்பு அந்த குடும்பத்தில் இருந்து வந்தவர்கள் அனைவரும் ஒரு சில படங்களே நடித்தனர். ஆனால், டி.ஆர்.ராஜகுமாரி தமிழ் சினிமாவின் கனவுக்கன்னியாக வெற்றிபெற, அந்தக் குடும்பத்தில் இருந்து மேலும் சிலர் திரையுலகிற்கு வந்தனர். அதில் மிகவும் முக்கியமானவர் டி.ஆர்.ராமண்ணா. தமிழ் சினிமாவின் இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர். எம்ஜிஆர் சிவாஜி இணைந்து நடித்த படத்தை தயாரித்த ஒரே தயாரிப்பாளர் இவர்தான். இதன்பின் டி.ஆர்.ராஜகுமாரியின் மருமகளான குசலகுமாரியும் திரைப்படங்களில் ஹீரோயினாக நடித்தார். 70களில் இவர் நாயகியாக கலக்கினார். இதன்பின் அடுத்த தலைமுறை வாரிசுகளாக நடிகை தனலட்சுமியின் மகள்கள் சினிமாவுக்குள் வந்தனர்.

அவர்கள் தான் கவர்ச்சி நாயகிகளாக 80களில் தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாக்கள் கோலோச்சிய ஜோதி லட்சுமி மற்றும் ஜெயமாலினி. தனலட்சுமியின் இன்னொரு சகோதரிக்கு குழந்தைகள் இல்லாததால், ஜோதிலட்சுமியை அவருக்கு தத்து கொடுத்தனர். ஜோதிலட்சுமி மற்றும் ஜெயமாலினி இருவருமே கவர்ச்சி பாடல்களுக்கு நடனமாட ரசிகர்களை ஈர்த்தவர்கள். எம்ஜிஆரின் நடிப்பில் வெளியான ‘பெரிய இடத்துப் பெண்’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகி, அந்தப் படத்தில் ”கட்டோடு குழலாட ஆட” என்கிற பாடல் மூலம் ஜோதிலட்சுமி பிரபலமானார். ‘சேது’ திரைப்படத்தில் ஹிட் அடித்த ‘கானா கருங்குயிலே’ பாடலுக்கு குத்தாட்டம் போட்டிருப்பாரே அவர்தான் ஜோதிலட்சுமி.

தமிழ் சினிமாவில் மறக்க முடியாத படமாக அமைந்த ‘ஜகன்மோகினி’ திரைப்படத்தின் நாயகி தான் ஜெயமாலினி. ஜோதிலட்சுமி 300 திரைப்படங்களில் நடித்துள்ளார் என்றால், ஜெயமாலினி 500 திரைப்படங்களில் பணியாற்றியிருக்கிறார். இந்த குடும்பத்தின் அடுத்த வாரிசு தான் ஜோதி மீனா. உள்ளத்தை அள்ளித்தா படத்தில் கவுண்டமணி ஜோடியாக நடித்தவர் தான் ஜோதி மீனா. இவர் விஜய், அஜித் உள்ளிட்ட நடிகர்கள் உடன் குத்து பாடலுக்கு நடனமாடியிருக்கிறார்.

சில திரைப்படங்களில் கேரக்டர் ரோலிலும் நடித்துள்ளார். ஜோதி மீனாவின் தந்தை ஒரு கேமரா மேன். இப்படி இந்த குடும்பமே தமிழ் சினிமாவில் கோலோச்சி வந்தது. எனினும் தற்போது இந்தக் குடும்பத்தைச் சேர்ந்த எவரும் சினிமாவில் இல்லை. ஆம், ஜோதி மீனா கடைசி தலைமுறை நடிகை. ஜோதி மீனா ஒரு மருத்துவரை திருமணம் செய்து வீட்டோடு மனைவியாக செட்டில் ஆக இவர்களின் மகனும் மருத்துவராகி உள்ளார். அப்படி சினிமா குடும்பமாக இருந்து தற்போது மருத்துவ குடும்பமாக மாறியுள்ளனர்.