சென்னை: அதிமுக சார்பில் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காத பலர் மாற்றுக்கட்சியை நாடி வருகின்றனர். இதையடுத்து, அவர்களை கட்சியில் இருந்து நீக்கி அதிமுக தலைமை நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன்படி, முன்னாள் அமைச்சர், எம்எல்ஏ உள்பட 7 பேரை கட்சியில் இருந்து நீக்கி ஒபிஎஸ், இபிஎஸ் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

சட்டமன்ற தேர்தலில்  தேர்தலில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டதால், ராமநாதபுரத்தை சேர்ந்த முன்னாள் அமைச்சர் எஸ்.சுந்தரராஜு திமுகவில் இணைந்தார். அதுபோல பலர் அமமுக உள்பட மாற்று கட்சிகளில் இணைந்து வருகின்றனர்.

இந்த நிலையில், மாற்றுகட்சிகளில் இணைந்தவர்களை  அதிமுக தலைமை களையெடுத்து வருகிறத. இதுதொடர்பாக, முதல்வர் ஈபிஎஸ் மற்றும் துணை முதல்வர் ஓபிஎஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

‘அதிமுகவின் கொள்கை, குறிக்கோள், கோட்பாடுகளுக்கு முரணாக செயல்பட்டதாலும், கண்ணியத்துக்கு மாசு ஏற்படும் வகையில் நடந்து கொண்டதாலும் கட்சியின் கட்டுப்பாட்டை மீறி களங்கம், அவப்பெயர் உண்டாகும் விதத்தில் செயல்பட்டதாலும்,

முன்னாள் எம்.எல்.ஏ.வி.நீலகண்டன்,

காஞ்சிபுரம் மாவட்ட எம்ஜிஆர் இளைஞரணி செயலாளர் ஆர்.வி.ரஞ்சித்குமார்,

ராமநாதபுரத்தை சேர்ந்த முன்னாள் அமைச்சர் எஸ்.சுந்தரராஜு,

விருதுநகர் கிழக்கு மாவட்ட எம்ஜிஆர் மன்ற துணை செயலாளர்களான என்.எஸ்.வாசன், ஏ.ஆர்.மணிகண்டன், எஸ்.ராமராஜ் பாண்டியன், கே.கே.வேல்முருகன்

ஆகியோர் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்து நீக்கப்படுகின்றனர். இவர்களுடன் கட்சி தொண்டர்கள் யாரும் தொடர்பு வைத்துக் கொள்ள கூடாது.’ என  தெரிவிக்கப்பட்டுள்ளது.