வால்பாறை
கொரோனா தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு உள்ள போலீசாரின் மன உளைச்சலை குறைக்க, சுழற்சி அடிப்படையில், ஏழு நாட்கள் விடுப்பு வழங்கப்பட்டுள்ளது.
வால்பாறை போலீஸ் சப் – டிவிஷனில், 105 பேர் மற்றும் ஆயுதப்படை, தனிப்படையை சேர்ந்த, 65 பேர் கொரோனா தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.பல நாட்களாக விடுப்பின்றி, அதிக நேரம் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
வீட்டிற்கு செல்ல முடியாமலும், அப்படியே வீட்டுக்கு சென்றாலும், உறங்குவதற்கு கூட போதுமான நேரமின்றி, போலீசார் பணிக்கு வருகின்றனர்.
குடும்பத்துடன் நேரத்தை செலவிட முடியாமல், வேலைப்பளுவால் போலீசார் உடல் ரீதியாகவும், உளவியல் ரீதியாகவும் சோர்ந்துள்ளனர்.
கொரோனா பாதித்த பகுதிகளில் பணியாற்றிய போலீசார், தங்களுக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதா என்ற அச்சத்துடனே பணியாற்றுகின்றனர்.
இந்நிலையில், போலீசாருக்கு, ஓய்வு கொடுத்து அவர்களின் மன உளைச்சலை குறைக்கவும், கொரோனா தொற்று அறிகுறிகள் உள்ளதா என கண்டறியவும் அரசு திட்டமிட்டு உள்ளது.
அதன்படி, வால்பாறை சப் – டிவிஷனில் கடந்த, 1ம் தேதி முதல் மூன்றில் ஒரு பகுதி போலீசாருக்கு ஓய்வு கொடுக்கப்பட்டு உள்ளது.டி.எஸ்.பி., விவேகானந்தன் கூறுகையில், ”போலீசார் ஓய்வெடுத்து குடும்பத்துடன் நேரத்தை செலவிடவும், கொரோனா வைரஸ் பாதித்ததா என கண்டறியவும், ஏழு நாட்கள் விடுப்பு கொடுக்கப்படுகிறது.
வயதானவர்கள், உடல் நிலை சரியில்லாத போலீசாருக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு ஓய்வு கொடுக்கப்படுகிறது. சுழற்சி அடிப்படையில் அனைவருக்கும் ஓய்வு கொடுக்கப்படும்.
இந்த நடைமுறையால் போலீசார் மன உளைச்சல் குறைந்து, மீண்டும் புத்துணர்வுடன் பணிக்கு திரும்புவார்கள்,” என்றார்.