டில்லி
டில்லி சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடரில் 7 பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று டில்லி சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் தொடங்கியது. டில்லி துணை நிலை ஆளுநர் வி.கே.சக்சேனா, சட்டமன்றத்தில் உரை நிகழ்த்தியபோது பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் தொடர் அமளியில் ஈடுபட்டனர். ஆளுநரின் உரையில் ஆம் ஆத்மி அரசின் சாதனைகள் குறித்து வாசிக்கப்பட்டபோது பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்துக் கூச்சலிட்டனர்.
அவையில் பெரும் சலசலப்பு ஏற்பட்டதால் சபாநாயகர் பாஜக சட்டமன்ற உறுப்பினர்களை அமைதியாக இருக்குமாறு வலியுறுத்தினார். ஆயினும் அவர்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால், துணை நிலை ஆளுநரின் உரைக்கு இடையூறு ஏற்படுத்துவதாகக் கூறி 7 பா.ஜ.க. சட்டமன்ற உறுப்பினர்களை அவையில் இருந்து வெளியேற்ற பாதுகாவலர்களுக்கு உத்தரவிட்டார்.
இந்த விவகாரம் தொடர்பாக நடவடிக்கை எடுக்கக்கோரி ஆம் ஆத்மி சட்டமன்ற உறுப்பினர். திலிப் பாண்டே இன்று சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டுவந்தார். அவர், பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் திட்டமிட்டு துணை நிலை ஆளுநரின் உரைக்கு இடையூறு ஏற்படுத்தியதாகவும், அவையின் மாண்பைக் குறைக்கும் வகையில் பாஜக எம்.எல்.ஏ.க்கள் நடந்து கொண்டதாகவும் தெரிவித்தார்.
உறுப்பினரின் தீர்மானத்தை ஏற்றுக்கொண்ட சபாநாயகர் ராம் நிவாஸ் கோயல், பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் மோகன் சிங் பிஷ்ட், அஜய் மஹாவார், ஓ.பி.சர்மா, அபய் வர்மா, அனில் வாஜ்பாய், ஜிதேந்தர் மஹாஜன் மற்றும் விஜேந்தர் குப்தா ஆகிய 7 பேரை சபையில் இருந்து வெளியேறுமாறு உத்தரவிட்டார். அவர்களை மீதம் உள்ள பட்ஜெட் கூட்டத்தொடர் முழுவதும் இடைநீக்கம் செய்து சபாநாயகர் உத்தரவிட்டார்.
[youtube-feed feed=1]