சென்னை:
தமிழகத்தில் அரசு பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு மருத்துவ மாணவர் சேர்க்கையில் 7.5% இட ஒதுக்கீடு செய்ய தமிழக அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
முதல்வர் பழனிசாமி தலைமையில் நேற்று மாலை தமிழக அமைச்சரவை கூட்டம் தலைமைச் செயலகத்தில் கூடியது.
இந்த கூட்டத்தில் தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும், கொரோனா தடுப்பு பணிகள் மற்றும் தளர்வுகள், மருத்துவ சேர்க்கை, நீட் தேர்வு உள்பட பல்வேறு பிரச்சினைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
இதையடுத்து, மருத்துவ மாணவர் சேர்க்கையில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள் ஒதுக்கீடு வழங்க அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளதாகவும், 5 ஆயிரம் கோடி முதலீடுகள் செய்யும் 6 தொழில் நிறுவனங்களுக்கும் ஒப்புதல் அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
தற்போது, அமைச்சரவை ஒப்புதல் வழங்கியதை தொடர்ந்து, விரைவில் அவசரச் சட்டம் பிறப்பிக்கப்பட்டு நடப்பு கல்வி ஆண்டிலேயே 7.5 சதவீத உள் இடஒதுக்கீட்டின் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது.
இதன் மூலம், எம்.பி. பி.எஸ்., பி.டி.எஸ். மருத்துவப் படிப்புகளில் இந்த ஆண்டு சேரும் அரசுப் பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை 400 முதல் 500 வரை உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.