சென்னை: அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்புக்கான இடஒதுக்கீட்டில் 7.5 சதவிகிதம் உள்ஒதுக்கீடு சட்டத்துக்கு தமிழக ஆளுநர் விரைவில் ஒப்புதல் தர சம்மதம் தெரிவித்து இருப்பதாக அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.

தமிழக சட்டமன்றத்தில்   அரசுப்பள்ளி மாணவர்களுக்கான 7.5% இட ஒதுக்கீடு வழங்கி புதிய சட்டம் இயற்றப்பட்டது.. இந்த சட்டம், ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டு உள்ளது. தற்போது நீட் தேர்வு முடிவு வெளியாகி உள்ள நிலையில், விரைவில் கலந்தாய்வு தேதி அறிவிக்கப்படஉள்ளது. ஆனால், கவர்னர் பன்வாரிலால், அந்த மசோதாவுக்கு கையெழுத்திடாமல் தாமதப்படுத்தி வருகிறார்.
இதையடுத்து, சட்ட மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்கும் வரை தமிழகத்தில் மருத்துவ கலந்தாய்வு நடத்தப்படாது என்றும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த விவகாரம் தொடர்பாக தமிழக அரசு ஆளுநரை நேரில் சந்தித்து அழுத்தம் தர வேண்டும் என அரசியல் கட்சிகள் வலியுறுத்தி வந்தன.
இந்த நிலையில், இன்று மதியம்,  தமிழக சட்டத்துறை அமைச்சர் சண்முகம், உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் , பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் ஆகியோர் சந்தித்தனர் ஆளுநரை சந்தித்து விரைந்து ஒப்புதல் அளிக்குமாறு கோரிக்கை விடுத்தனர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார்,  7.5% உள்ஒதுக்கீடு  மசோதாவுக்கு  ஆளுநர் விரைந்து ஒப்புதல் தருவதாக  உறுதியளித்திருக்கிறார் என கூறியுள்ளார்.