சென்னை: திமுகழக தலைவராக 6ம் ஆண்டில் மு.க.ஸ்டாலின் அடியெடுத்து வைத்துள்ளதற்கு, திமுக எம்.பி. கனிமொழி, இளைஞர் அணி தலைவரும் அமைச்சருமான உதயநிதி உள்பட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து உள்ளனர்.
திமுக தலைவராக இருந்த கருணாநிதி மறைவுக்கு கட்சியின் தலைவராக மு.க.ஸ்டாலின் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். முன்னதாக, கடந்த 2017ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்து திமுக கட்சியின் செயல் தலைவராக பதவி வகித்து வந்தார். 2018 ஆம் ஆண்டு முன்னாள் முதல்வர் மு. கருணாநிதி மறைந்த பிறகு, ஆகஸ்ட் மாதம் 28ம் தேதி தி.மு.கவின் தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.
இதனையடுத்து கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் நடைபெற்ற 15வது உட்கட்சித் தேர்தலில் மீண்டும் 2வது முறையாக திமுக தலைவராக போட்டியின்றி தேர்வானார். தொடர்ந்து கழகத்தின் தலைவராக 5 ஆண்டுகளை நிறைவு செய்திருக்கும் மு.க.ஸ்டாலின், இன்று 6வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறார். இதனையொட்டி திமுகவினர் பலரும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இதுதொடர்பாக திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலினுக்கு திமுக எம்.பி. கனிமொழி வாழ்த்தி டிவிட் பதிவுள்ளார். அதில், “பேரறிஞர் அண்ணாவும் தலைவர் கலைஞரும் கட்டிக்காத்த நம் தி.மு.கழகத்தின் தலைவராக ஐந்தாண்டுகள் சிறப்புற பணியாற்றி, ஆறாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் தளபதி திரு. மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு என் வாழ்த்துகள். இந்திய ஜனநாயகம் கடும் நெருக்கடியைச் சந்தித்துவரும் வேளையில், ஒன்றுபட்ட இந்தியாவை மீட்டெடுக்கும் அவரது அரசியல் பணிகள் நமக்கு எழுச்சியூட்டுகின்றன.” என்று குறிப்பிட்டுள்ளார்.
திமுக இளைஞரணி செயலாலரும், விளையாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், “தமிழ்நாட்டின் ஒற்றை நம்பிக்கையாம் நம் தி.மு.கழகத்தின் தலைவராக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் பொறுப்பேற்று இன்றுடன் 5 ஆண்டுகளை நிறைவு செய்து ஆறாம் ஆண்டில் நம்மையெல்லாம் வழிநடத்தவுள்ளார்கள்.
அரை நூற்றாண்டு காலம் இயக்கத்தை கட்டிக்காத்த முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்கள் வழி நின்று கழகத்தின் கொள்கையாலும், ஆட்சியில் செயல்படுத்தும் திட்டங்களாலும் இந்திய ஒன்றியத்திற்கே வழிகாட்டி வருகிறார் நம் கழகத்தலைவர் அவர்கள். 2019 நாடாளுமன்றத் தேர்தல் – 2021 சட்டமன்றத் தேர்தல் – உள்ளாட்சித் தேர்தல் என களம் கண்ட அத்தனை தேர்தல்களிலும் வெற்றி வாகை சூடிய கழகத் தலைவரின் வழிகாட்டுதலோடு 2024 நாடாளுமன்ற தேர்தலில் பாசிஸ்ட்டுகளை வீழ்த்தி இந்தியாவுக்கு விடியலை ஏற்படுத்த அயராது உழைப்போம்.” என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும் பல அரசியல் கட்சி தலைவர்கள், கழக தலைவர்கள், தொண்டர்கள் என அனைத்து தரப்பினரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.