சென்னை: திமுக தலைவரும், தமிழ்நாட்டின் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் 69வது பிறந்தநாயையொட்டி, இன்று காலை அவர் மெரினாவில் உள்ள அண்ணா, கருணாநிதி நினைவிடங்களில் மலர் வளையம் வைத்து மரியாதை செய்தார். பின்னர் வேப்பேரியில் உள்ள பெரியார் நினைவிடத்துக்கு சென்றும் மரியாதை செய்தார்.
தமிழ்நாடு முதல்வராக பதவி ஏற்ற பின்னர் மு.க.ஸ்டாலின் கொண்டாடும் முதல் பிறந்தநாள் இது. மேலும், கொரோனா ஊரடங்கு காரணமாக 2 ஆண்டுகளுக்கு திமுக தொண்டர்களால் விமரிசையாக கொண்டாடப்படும் பிறந்தநாள். இதனால், திமுக தொண்டர்கள் ஆங்காங்கே பொதுமக்களுக்கு அன்னதானம் உள்பட பல்வேறு நலத்ததிட்ட உதவிகளை வழங்கி சிறப்பித்துவருகின்றனர்.
பிறந்தநாளை முன்னிட்டு முதலமைச்சர் ஸ்டாலின் இன்று காலை சென்னை மெரினா கடற்கரையில் உள்ள பேரறிஞர் அண்ணா, கலைஞர் நினைவிடங்களில் மரியாதை செலுத்தினார். பின்னர் பெரியார் திடலுக்கு சென்ற முதல்வர் ஸ்டாலின் பெரியார் நினைவிடத்திலும் மரியாதை செலுத்தினார். அவருடன் அமைச்சர்கள் துரைமுருகன், ஐ. பெரியசாமி, எம்.பி. தயாநிதி மாறன், ஆ.ராசா, டி.ஆர்.பாலு உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
காலை 9 மணிக்குக்கு மேல் திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயம் வந்து கலைஞர் அரங்கத்தில் தொண்டர்களிடம் வாழ்த்து பெற உள்ளார் என திமுக தலைமைக்கழகம் அறிவித்துள்ளது.
திராவிடர் கழகத்தின் சார்பில் இந்த வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது திராவிடர் கழகத் தலைவர் கி வீரமணி வாசலில் நின்று மு. க. ஸ்டாலினை வரவேற்பு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார்.
அதன்பின்னர் கீழ்ப்பாக்கத்தில் உள்ள மறைந்த பேராசிரியர் அன்பழகன் வீட்டிற்கு சென்று அவரது உருவப்படத்திற்கு மாலை அணிவித்து வணங்கினார் ஸ்டாலின். கோபாலபுரம் சென்று தயாளு அம்மாளிடம் ஆசி பெற்றார். அங்கிருந்து நேராக சிஐடி காலனிக்கு சென்று ராஜாத்தி அம்மாள் இடம் வாழ்த்து பெற்றார்.
முன்னதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது பிறந்தநாளையொட்டி திமுக தொண்டர்களுக்கு எழுதிய கடிதத்தில், என் பிறந்தநாளையொட்டி, தொண்டர்கள் நடத்தும் நிகழ்ச்சிகளில் ஆடம்பரம் சிறிதும் தலைகாட்டிவிடக் கூடாது என்றும், மக்களுக்கு பயனுள்ள வகையில் நலத்திட்ட உதவிகளை வழங்குங்கள் என்றும் அறிவுறுத்தியிருந்தார். அறிவுப் புரட்சிக்கு வித்தாகும் புத்தகங்களை வழங்குங்கள் எனவும், வருங்கால தலைமுறைக்கு நம் லட்சியங்களை எடுத்துரைக்கும் வகையில் புதிய உறுப்பினர்களைச் சேருங்கள் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார். அதோடு திராவிட மாடல் அரசின் 9 மாத கால சாதனைகளை மக்களிடம் விரிவாக எடுத்துரையுங்கள் என்றும் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.