ஈரோடு:

கொரோனா வைரஸ் தாக்கத்தினால் ஈரோடு மாவட்டம் தனிமைப்படுத்தப்பட்டு உள்ள நிலையில், ஈரோட்டில் 695 பேர் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

கொரோனா வைரஸின் கோரம் தமிழகத்திலும்  நாளுக்கு நாள்  அதிகரித்துவரும் நிலையில் கொரோனா அறிகுறிகளுடன் சிகிச்சைக்கு அனுமதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

ஈரோடு மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு அதிகம் இருப்பதாக கூறப்பட்ட நிலையில் அதன் எல்லைகள் மூடப்பட்டுள்ளன. நாமக்கல் மாவட்ட எல்லையான குமாரபாளையத்தில் தடுப்பு ஏற்படுத்தப்பட்டு ஈரோடு மாவட்டத்திலிருந்து வரும் வாகனங்கள் தடுத்து நிறுத்தப்படுகின்றன.

ஈரோடு மாவட்டம் பவானியிலிருந்து வரும் வாகனங்கள் நாமக்கல் மாவட்ட எல்லையில் தடுத்து நிறுத்தப்படுகின்றன. அத்தியாவசிய பொருள்கள் கொண்டு வரும் வாகனங்கள் மட்டும் கிருமி நாசினிகள் தெளித்து பின்னர் அனுப்பப்படுகின்றன.

இந்த நிலையில், ஈரோட்டில் கொரோனா பாதிக்கப்பட்ட தாய்லாந்து நாட்டினர் தங்கியிருந்த  கொல்லம்பாளையம் மற்றும் சுல்தான்பேட்டை பகுதிகளில் 169 வீடுகளில் தங்கியுள்ள சுமார் 695 பேர்  தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். அவர்கள் வீடுகளில் அடுத்த மாதம் 18ந்தேதி வரை தனிமைப்படுத்தப்படுவதாக அவர்களின் ஸ்டிக்கர்  ஒட்டப்பட்டு உள்ளது.

மாநில சுகாதாரத்துறையினர் உள்பட, காவல்துறையினரும், அவர்கள் வீட்டை விட்டு வெளியேறாதவாறு  கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.