டெல்லி: 67வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா இன்று டெல்லியில் நடைபெற்றது. இதில் தமிழகத்தைச் சேர்ந்த நடிகர்கர் பார்த்திபன், தனுசு, விஜய்சேதுபதி, இசைஅமைப்பாளர் இமான் உள்பட பல தமிழ் திரையுலக நட்சத்திரங்களுக்கு துணை குடியரசுத்தலைவர் வெங்கையா நாயுடு விருதுகளை வழங்கினார்.
2019 ஆம் ஆண்டு வெளியான மற்றும் அந்த ஆண்டில் தணிக்கை செய்யப்பட்ட திரைப்படங்களுக்கான 67வது தேசிய திரைப்பட விருதுகள் டெல்லியில் இன்று வழங்கப்பட்டு வருகிறது. இந்த விருது தமிழ்நாட்டைச் சேர்ந்த நடிகர் ரஜினிகாந்துக்கு ‘தாதா சாகேப் பால்கே’ விருதும், நடிகர்கள் தனுஷ், விஜய்சேதுபதி, பார்த்திபன், வெற்றிமாறன், தாணு, இமான் உள்ளிட்டோருக்கும் விருது அறிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி, இன்று நடைபெற்ற விழாவில் நடிகர் ரஜினிகாந்துக்கு தாதா சாஹேப் பால்கே விருது வழங்கப்பட்டது.
சிறந்த பிராந்திய மொழி படத்துக்கான விருது அசுரன் படத்துக்கு வழங்கப்பட்டது. இந்த விருதினை படத்தின் இயக்குநர் வெற்றிமாறன் மற்றும் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தாணு ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.
‘அசுரன்’ திரைப்படத்தில் சிறப்பாக நடித்ததற்காக நடிகர் தனுஷ்-க்கு விருது வழங்கப்பட்டது.
சூப்பர் டீலக்ஸ் படத்தில் திருநங்கை வேடத்தில் நடித்த விஜய் சேதுபதிக்கு சிறந்த துணை நடிகருக்கான விருது வழங்கப்பட்டது.
கே.டி கருப்பு திரைப்படத்தில் நடித்த குழந்தை நட்சத்திரம் நாக விஷால் என்ற சிறுவனுக்கும் விருது வழங்கப்பட்டது.
விஸ்வாசம் திரைப்படத்தில் இடம் பெற்ற கண்ணான கண்ணே பாடலுக்காக இசை அமைப்பாளர் டி. இமான் பெற்றுக்கொண்டார்.
சிறப்பு ஜூரி விருதை ஒத்த செருப்பு படத்துக்காக பார்த்திபன் பெற்றுக்கொண்டார்.
விருது வழங்கும் விழாவில் ரஜினிகாந்த், அவரது மனைவி லதா ரஜினிகாந்த், மகள் ஐஸ்வர்யா தனுஷ், நடிகர் தனுஷ், மகன்கள் யாத்ரா, லிங்கா உள்பட குடும்பத்தினருடன் கலந்து கொண்டனர்.
இதுகுறித்து டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய இமான், தமிழ்நாட்டில் இருந்து தற்போது தேசிய விருது பெறும் அனைவருடனும் பணியாற்றியுள்ளேன். அவர்களோடு சேர்ந்து விருதை பெறுவது மகிழ்ச்சியான தருணம். “கண்ணான கண்ணே” என்ற பாடலுக்கு விருது கிடைத்து மிகவும் மகிழ்ச்சியானது, ஆனால் இது அந்த பாடலுக்கானது மட்டும் என்று கருத முடியாது, அதே வேளை நெடு நாட்களுக்கு பின் ஒரு கமர்ஷியல் சினிமாவுக்கு கிடைத்துள்ள அங்கிகாரம் இது. இந்த பாடலுக்கான விருதை அனைத்து அப்பாக்களுக்கும், மகள்களுக்கும் சமர்ப்பணம் செய்கிறேன் என கூறினார்.
விருது பெற்றது குறித்து கருத்து தெரிவித்த விஜய்சேதுபதி, , “விருது பெறுவது ரொம்பவும் மகிழ்ச்சியாக இருக்கு. அதுவும் ஷில்பாக்காக இந்த விருது கிடைக்கிற தென்பது, இன்னும் மகிழ்ச்சியாக இருக்கிறது. தியாகராஜன் குமாரராஜாவை மட்டுமே நம்பி, ஷில்பா கதாபாத்திரத்தில் நான் நடித்தேன். ஆகவே அவருக்கே இந்த தருணத்தில் என்னுடைய முழு நன்றியையும் தெரிவிக்க விரும்புகிறேன். . விருது என்பதைவிட, கலைஞர்கள் அனைவரையும் ஒரே இடத்தில் சந்திப்பது எனக்கு கூடுதல் மகிழ்ச்சியையும் நிறைவையும் தருகிறது. சில வேற்று மொழி கலைஞர்கள் என் படத்தை பார்த்ததாக கூறி பாராட்டியது, இன்னும் மகிழ்ச்சியை கொடுத்தது” என்றார்.