யாங்கன்:
மியான்மரில் ஒரே மாதத்தில் 6 ஆயிரத்து 700 ரோஹிங்கியா இஸ்லாமியர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
மியான்மரில் கடந்த ஆகஸ்ட் 25ம் தேதி ரோஹிங்கியா இஸ்லாமியர்கள் மீது ராணுவம் தாக்குதல் நடத்தியது. இதை தொடர்ந்து ஏற்பட்ட வன்முறையில் 6 லட்சத்து 20 ஆயிரம் பேர் தப்பி வங்க தேசத்தில் அகதிகளாக தஞ்சமடைந்தனர்.
இந்நிலையில், ரோஹிங்கியா அகதிகள் முகாம்களில் 2,434 பேரிடம் டாக்டர்ஸ் வித் அவுட் பார்டர்ஸ் என்ற அமைப்பு ஆய்வு மேற்கொண்டது.
இதுகுறித்து அந்த குழுவின் மருத்துவ இயக்குநர் வாங் கூறுகையில், ‘‘ மியான்மர் வன்முறையில் தப்பி பிழைத்தவர்கள் வங்க தேசத்தில் நெருக்கடியான மற்றும் சுகாதாரமற்ற முறையில் வசித்து வருகின்றனர்.
5 வயதிற்கு உட்பட்ட 730 குழந்தைகள் உள்பட 6 ஆயிரத்து 700 பேர் கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. துப்பாக்கியால் சுட்டு மட்டும் 69 சதவீதம் பேர் பலியாகியுள்ளனர். வீடுகளில் உயிருடன் எரித்து 9 சதவீதம் பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
5 சதவீதம் பேர் அடித்து கொல்லப்பட்டுள்ளனர். குழந்தைகளில் 60 சதவீதம் பேர் துப்பாக்கியால் சுட்டு கொல்லப்பட்டுள்ளனர் என்றும் ஆய்வு முடிவு தெரிவித்துள்ளது.