சேலம்: மேட்டூர்அணை முழு கொள்ளளவை எட்டிய நிலையில், அணைக்கு வரும் உபரி நீரான 65 ஆயிரம் கன அடி நீர் காவல்வாய்களில் திறக்கப்பட்டு உள்ளது. இதனால், கால்வாய் கரையோர பயிர்கள் தண்ணீரில் மூழ்கி பெரு நஷ்டத்தை ஏற்படுத்தி உள்ளதாக விவசாயிகள் தெரிவித்து உள்ளனர்.

தமிழகம் உள்பட காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருவதால், காவிரியில் வரும் தண்ணீரின் அளவு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கர்நாடகாவில் உள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகளில் இருந்தும் 22 ஆயிரத்து 957 கன அடி தண்ணீர் காவிரியில் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால்,  ஒனேக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.  நேற்று மாலை நீர்வரத்து 65 ஆயிரம் கன அடியாக அதிகரித்தது. இதனால் ஒகேனக்கல் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. இதனால் அங்கு குளிக்கவும், பரிசல் இயக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. கரையில் இருப்பவர்கள் பாதுகாப்பாக இருக்கும் படி வருவாய் துறையினர் மற்றும் தீயணைப்பு துறையினர் அறிவுறுத்தி உள்ளனர். இங்கிருந்து மேட்டூர் அணைக்கு செல்லும் தண்ணீரின் அளவு  நேற்று  55 ஆயிரம் கன அடியாக இருந்த நிலையில், இன்று 65 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது.

மேட்டூர் அணை ஏற்கனவே கடந்த முழு கொள்ளளவான 120 அடியை  எட்டியதால்,  அணைக்கு வரும் தண்ணீர் முழுவதும் அப்படியே காவிரியில் வெளியேற்றப்படுகிறது. காவிரியில் தண்ணீர் திறப்பு அதிகரிக்கப்படுவதால் நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் பகுதிகளில் தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். மேலும் அதிகாரிகள் காவிரி கரையோர தாழ்வான பகுதிகளில் 24 மணி நேரமும் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள்.

மேலும்,  மேட்டூர் காவிரி கரையில் பயிரிடப்பட்டு இருந்த நெல், வாழை பயிர்கள் நீரில் மூழ்கின. இதனால் விவசாயிகள் வேதனை அடைந்து உள்ளனனர். வெள்ளம் காரணமாக காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை நீடிப்பதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்து உள்ளது