டில்லி

டில்லியில் உள்ள சுமார் 65% வர்த்தகர்கள் ஊரடங்கை மேலும் நீட்டிக்க விரும்புவதாகத் தெரிவித்துள்ளனர்.

தலைநகர் டில்லியில் கொரோனா பாதிப்பு அதிக அளவில் உள்ளது.  இங்கு நேற்று ஒரே நாளில் 17 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.  மொத்தம் 13.10 லட்சம் பேர் பாதிக்கப்பட்டு 19 ஆயிரம் பேர் உயிர் இழந்துள்ளனர்.  நேற்று வரை 12.03 லட்சம் பேர் குணம் அடைந்து தற்போது சுமார் 88  ஆயிரம் பேர் சிகிச்சையில் உள்ளனர்.

கொரோனாவை கட்டுப்படுத்த டில்லி அரசு ஏப்ரலில்  ஊரடங்கை  அறிவித்து அதை இரு முறை நீட்டித்துள்ளது.  இம்முறை நாளை காலை 5 மணியுடன் ஊரடங்கு முடிவுக்கு வருகிறது.   முதல்வர் கெஜ்ரிவால் நிலைமையை ஆய்வு செய்த பிறகு மேலும் ஊரடங்கை நீட்டிப்பது குறித்து முடிவு செய்யப்படும் என கடந்த புதன் கிழமை அறிவித்திருந்தார்.

இதனிடையில் ஊரடங்கு நீட்டிப்பு குறித்து அகில இந்திய வர்த்தகர் சம்மேளனம் வரும் 15 ஆம் தேதி வரை தலைநகரில் ஊரடங்கை நீட்டிக்க டில்லி முதல்வருக்கு வேண்டுகோள் விடுத்திருந்தது.  தற்போது கொரோனா பரவல் அதிகரித்துள்ளதாலும் அதற்கேற்ப மருத்துவ வசதிகள் இல்லாததாலும் மேலும் பரவலைத் தடுக்க ஊரடங்கை நீட்டிக்கலாம் எனச் சம்மேளனம் யோசனை தெரிவித்தது.

இந்நிலையில் டில்லி வர்த்தகர் சங்கம் இது குறித்து டில்லியில் உள்ள 480 வர்த்தகர்கள் மற்றும் சர்வதேச நிறுவனங்களிடம் ஊரடங்கு நீட்டிப்பு குறித்து கருத்துக் கேட்டுள்ளதில் இதில் 315 வர்த்தகர்கள் மேலும் ஒரு வாரம் ஊரடங்கை நீட்டிக்க ஆதரவு அளிக்க விரும்புவதாகத் தெரிவித்துள்ளனர்.    60 வர்த்தகர்கள் இரண்டு வாரம் வரை நீட்டிக்கலாம் என யோசனை தெரிவித்துள்ளனர்.

இதே வேளையில் சுமார் 100 வர்த்தகர்கள் டில்லியில் ஊரடங்கை நீக்க வேண்டும் எனக் கருத்து தெரிவித்துள்ளனர்.  அவர்கள் வாரத்தில் மூன்று நாட்கள் கடைகளைத் திறக்க அனுமதி அளிக்க வேண்டும் எனக் கருத்து தெரிவித்துள்ளனர்.  இதற்காக ஒற்றைப்படை மற்றும் இரட்டைப்படை வரிசை எண்களைப் பயன்படுத்தலாம் எனவும் யோசனை தெரிவித்துள்ளனர்.