விழுப்புரம்: ஜூலை 10-ம் தேதி  வாக்குப்பதிவு நடைபெற உள்ள விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் மொத்தம் 64 பேர் வேட்பு மனுத்தாக்கல் செய்துள்ளதாக தேர்தல் அதிகாரி தெரிவித்து உள்ளார்.

திமுக எம்எல்ஏ புகழேந்தி காலமானதைத் தொடர்ந்து காலியாக உள்ள விக்கிரவாண்டி  தொகுதிக்கு இடைத்தேர்தல் ஜூலை 10-ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு  ஜூன் 14-ம் தேதி தொடங்கி நிலையில், ஜுன் 21ந்தேதி (நேற்று) உடன் முடிவடைந்தது. இந்த தேர்தலில்  அரசியல் கட்சியினர், சுயேச்சை என மொத்தம்  64 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.

திமுக, பாமக, நாம் தமிழர் கட்சிகள் சார்பில் அதிகாரப்பூர்வமாக வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு உள்ளது. தமிழ்நாட்டின் எதிர்க்கட்சியான அ.தி.மு.க விக்கிரவாண்டி இடைத் தேர்தலைப் புறக்கணிப்பதாக அறிவித்தது. இதனால், விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் மும்முனை போட்டி நிலவுகிறது.

தேர்தலில் வேட்புனுமனுத்தாக்கல் முடிவடைந்தநிலையில், வரும்  24ம் தேதி வேட்புமனு  பரிசீலனை நடக்கிறது. மனுவை திரும்ப பெற 26ம் தேதி கடைசி நாள். அன்றைய தினம் மாலையே இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படுகிறது. இதையடுத்து, ஜூலை 10-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஜூலை 13-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.