டெல்லி: ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில்,  குலாம் நபி ஆசாத்துக்கு ஆதரவாக அம்மாநில முன்னாள் துணை முதல்வர் தாரா சந்த் உட்பட காங்கிரஸ் தலைவர்கள் 64 பேர் காங்கிரஸ் கட்சியை விட்டு விலகிவிட்டு, குலாம் நபி ஆசாத்துக்கு ஆதரவு தெரிவித்தனர்.

மூத்த காங்கிரஸ் தலைவரான குலாம் நபி ஆசாத், காங்கிரஸ் தலைமை மற்றும், ராகுல்காந்தி மீது கடுமையான குற்றச்சாட்டுக்களை சுமத்திய நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை கட்சியின் அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விலகினார். ஆனால்,  காங்கிரஸ் கட்சியை அவதூறு செய்ய ஆசாத் பணிக்கப்பட்டுள்ளதாகவும், இதன்மூலம் அவர் தன்னை தரம் தாழ்த்திக் கொண்டுள்ளதாகவும் காங்கிரஸ் கட்சி அவர்மீது குற்றம் சுமத்தியது.

இந்த நிலையில் குலாம்நபி ஆசாத் புது கட்சியை தொடங்கப்போவதாக தகவல் வெளியாகி உள்ளது.  ஆசாத்தை ஜம்மு காஷ்மீரை சேர்ந்த கட்சியின் முன்னாள் எம்எல்ஏக்கள் உள்ளிட்ட பலர் சந்தித்து தங்கள் ஆதரவை தெரிவித்து வந்தனர்.  இதையடுத்து நேற்று, ஜம்மு காஷ்மீர் காங்கிரஸ் தலைவர்கள் 64 பேர் நேற்று குலாம் நபி ஆசாத்துக்கு ஆதரவாக காங்கிரஸை விட்டு விலகுவதாக அறிவித்தனர்.

அதைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த ஜம்மு காஷ்மீர் முன்னாள் துணை முதல்வர் தாரா சந்த், முன்னாள் அமைச்சர்கள் அப்துல் மஜித் வானி, மனோகர் லால் சர்மா, கரு ராம், முன்னாள் எம்எல்ஏ பல்வான் சிங் உள்பட தலைவர்கள்,  “குலாம் நபி ஆசாத்துக்கு ஆதரவாக நாங்கள் காங்கிரஸை விட்டு விலகுகிறோம். நாங்கள் கூட்டாக எழுதிய ராஜினாமா கடிதத்தை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு அனுப்பியுள்ளோம்” என்றார்.