கமுதி: பசும்பொன் தேவர்  62வது குருபூஜையையொட்டி, பசும்பொன்னில் உள்ள அவரது நினைவிடத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.

ராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்கத் தேவரின் நினைவிடத்தில், அவரது 11வது ஜெயந்தி மற்றும் 62வது குருபூஜையையொட்டி,  தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்  நேரில் சன்று மரியாதை செலுத்தினார்.

தேசிய தலைவர் பசும்பொன் முத்து ராமலிங்கத் தேவரின் 117-ஆவது ஜெயந்தி விழா, 62-ஆவது குரு பூஜை விழா  கடந்த 3 நாட்களாக நடைபெற்று வருகிறது. இன்று இறுதியான குஜபூஜை விழா பசும்பொன்னில் உள்ள அவரது நினைவிடத்தில் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இதையொட்டி, ஏராளமானோர் பால்குடம், ஜோதி, முளைப்பாரி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், குருபூஜையொட்டி, தேவர் நினைவிடத்தில் மரியாதை செலுத்த சென்னையில் இருந்து மதுரை வருகை தந்த முதல்வர் ஸ்டாலின் இன்று காலை,   கோரிபாளையத்தில் தேவர் சிலைக்கு மரியாதை செலுத்தினார். தொடர்ந்து, தெப்பக்குளம் பகுதியில் உள்ள மருதுபாண்டியர்களின் உருவச் சிலைகளுக்கு மாலை அணிவித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.

இதைத்தொடர்ந்து கார் மூலம்  சாலை மார்க்கமாக பசும்பொன்னுக்கு சென்ற முதல்வர் ஸ்டாலின், முத்துராமலிங்கத் தேவரின் நினைவிடத்தில் மாலை அணிவித்து, மலர்தூவி  மரியாதை செலுத்தினார்.

இந்த நிக ழ்வில், அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, கே.ஆர்.பெரியகருப்பன், மு.பெ.சுவாமிநாதன், பி.கீதாஜீவன், அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன், ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன், அர.சக்கரபாணி, பி.மூர்த்தி, பழனிவேல் தியாகராஜன், அன்பில் மகேஸ், டி.ஆர்.பி.ராஜா மற்றும் எம்பிக்கள், எம்எல்ஏக்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர்.

சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம், தென்மண்டல ஐஜி பிரேம் ஆனந்த் சின்கா தலைமையில் ராமநாதபுரம் சரக டிஐஜி அபிநவ்குமார், மாவட்ட காவல் காவல் கண்காணிப்பாளர் ஜி.சந்தீஷ் மற்றும் காவல்துறை அதிகாரிகள் உள்ளிட்ட 10,000 போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.