சென்னை: தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையில் இதுவரை இல்லாத அளவில் கொரோனா பாதிப்பு தீவிரமாகி வருகிறது.  கொரோனா தொற்று பரவல் தொடங்கிய இந்த இரு ஆண்டு காலக்கட்டத்தில், முதன்முதலாக சென்னையில் கொரோனா தொற்று காரணமாக சிகிச்சையில் இருப்போர் மொத்த எண்ணிக்கை 60,126  ஆக உயர்ந்துள்ளது. இது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இந்தியாவில் கடந்த 2020ம் ஆண்டு இறுதியில் கொரோனா பரவல் தொடங்கியது.  அதைத்தொடர்ந்து 2021 டிசம்பர் முதல் வாரத்தில் பிறழ்வு வைரஸ் ஒமிக்ரான்  வகை கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது. ஆனால், ஒமிக்ரான் தொற்றால் உயிரிழப்பு ஏற்படவில்லை என்பது தெரிய வந்துள்ளது. மேலும் அதன் பாதிப்பும் மிதமாகவே உள்ளது. ஆனால், மக்களிடையே டெல்டா வகை கொரோனா தொற்று பரவல் மீண்டும் வேகமெடுத்துள்ளது.

நாடு முழுவதும் நேற்று (17ந்தேதி) மட்டும் புதிதாக மேலும் 2,58,089 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். தமிழ்நாட்டிலும் நேற்று புதிதாக மேலும், 23,443 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்தம் 29,63,366 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தலைநகர் சென்னையில் இதுவரை  6,52,395 பேர் கொரோனாவால்  பாதிக்கப்பட்டுள்ளனர்.  8,740 பேர் மரணம் அடைந்துள்ளனர். அதே வேளையில் 5,83,529 பேர் குணம் அடைந்துள்ளனர். தற்போது சென்னையில் 60,126 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

சென்னையில் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை கடந்த இரு ஆண்டுகளில் இல்லாத வகையில் அதிகரித்துள்ளது.

கொரோனா தொற்று பரவல் இந்தியாவில் கண்டறியப்பட் கடந்த 2019- ஆம் ஆண்டில் இருந்து பார்த்தாமானால்,  தற்போதுதான் சென்னையில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை அதிகமாக இருப்பது தெரியவந்துள்ளது. சென்னையில் தற்போதைய நிலவரப்படி சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 60,126ஆக உள்ளது.

கொரோனா 2-வது அலையின் போது சென்னையில் தொற்று பாதிப்புடன் சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை 50 ஆயிரத்தை நெருங்கியது. அதாவது கடந்த ஆண்டு மே மாதம்  22 ஆம் தேதி 49 ஆயிரத்து 236- பேர் சிகிச்சையில் இருந்தனர். இதுதான் சென்னையில் அதிகபட்சமாக இருந்த நிலையில், தற்போது 3-வது அலையில் 60 ஆயிரத்தை கடந்து அதிர்ச்சி அளித்துள்ளது.

கடந்த ஆண்டு பரவிய கொரோனா 2வது அலையின் தாக்கத்தின்போதுகூட இந்த அளவுக்கு மக்கள் பாதிக்கப்படவில்லை என்றும்,  தற்போது, இந்தியாவில் தினசரி பாதிப்பு 2 லட்சத்தை தாண்டியுள்ளது. தமிழகத்திலும் தினசரி பாதிப்பு 20 ஆயிரத்தை கடந்து சென்றுள்ளது என்று தெரிவித்துள்ள சுகாதாரத்துறை அதிகாரிகள், அதிக பட்சமாக சென்னையில் கொரோனா தொற்று காரணமாக சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை இதுவரை இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளது  என்றும் தெரிவித்து உள்ளனர்.

கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த கடுமையான கட்டுப்பாடுகள் இருந்தாலும், சென்னை போன்ற பெருநகரங்களிலும், மக்கள் அதை பின்பற்றாமல் தான்தோன்றித்தனமாக நடந்துகொள்வதால், தொற்று பரவல் மிக அதிகமாக உள்ளது.  மேலும் சென்னையில் தொற்று பரவல் அதிகரிப்புக்கு, மக்கள் நெருக்கமும் காரணமாக கூறப்படுகிறது.