சென்னை: கொரோனா தடுப்பூசி முதற்கட்டமாக 60 ஆயிரம் மருத்துவ பணியாளர்களுக்கு வழங்க நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களை அவர் சந்தித்த போது இந்த விவரத்தை வெளியிட்டுள்ளார். அவர் மேலும் கூறியதாவது: சென்னையில் இந்த ஆண்டு 60 சதவீதம் கூடுதலாக மழை பெய்துள்ளது. 6 நாட்களில், வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட குடிசைப்பகுதிகளில் வசிக்கும் 1.05 கோடி மக்களுக்கு, 300 உணவு தயாரிக்கும் கூடங்களில் உணவு தயாரித்து, தரமான உணவு வழங்கப்பட்டு உள்ளது.
நிவர், புரெவி புயல்களால் சென்னையில் பாதிப்பு இருந்தாலும், முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் எதிரொலியாக பாதிப்புகள் குறைவாகவே இருந்தன. மழை நீர் தேங்கும், மிகவும் சவாலான 23 இடங்களை தேர்ந்தெடுத்து, அங்கு இனி எந்த பாதிப்பும் ஏற்படாத வகையில் நிரந்திர தீர்வு காண பொறியாளர்கள் குழு ஆய்வு செய்து வருகிறது.
சென்னையில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை 3 சதவீதமாக குறைந்துள்ளது. அடுத்த சில நாட்களில் சென்னையில் பரிசோதனை எண்ணிக்கை 25 லட்சத்தை தாண்டும். சென்னையில் கொரோனா தடுப்பூசி 60 ஆயிரம் மருத்துவ பணியாளர்களுக்கு முதல்கட்டமாக வழங்கப்படும். 2ம் கட்டமாக முன்கள பணியாளர்களுக்கும், 3ம் கட்டமாக முதியவர்களுக்கும் வழங்கப்படும் என்றார்.